பக்கம்:இலக்கண வரலாறு.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

உரை

உரையாசிரியரும் இவரே எனக் கண்டோம், மேற்கோள் பாடல்கள் பழ நூல்களிலிருந்து கொள்வதுடன், தம் நூலில் இருந்தும் கையாள்கிறார். இந் நூற்கெனவும் புதிதமைத்துக் கொள்கிறார்.

“போர்முகத் தணிகளைப் பலவகை யூகமாக வகுத்தது போலக் குறித்த பயனை அடைவதற்கேற்ற ஒழுங்குத் தெளிவுறுவுமாம்படித் தெரித்த நியாயங்களைப் பகுத்த பின்னர் ஏற்றிய சுவர்மேற் சித்திரம் எழுதுவார் போலவும், உறையில் கிடந்த நெடும் வாளுருவி வீசுவார் போலவும் நானும் அவற்றைத் தனித்தனி விரித்துக் காட்டுதல் வேண்டும். இதற்கு ஐந்தாம் அதிகாரத்திற் சொல்லப்படும் அலங்காரங்களே வழியாம்”, என்பது ஒரு செய்தியை விளக்குவதற்காக இவர் கையாளும் உவமைகளைக் குறிப்பதாம் (162).

மேலை நாட்டினராகிய இவர்க்கு இந்நாட்டு வருணப் பிரிவு ஒப்பும் தன்மையதன்று. ஆயினும், இவர் காலத்து நூல்களும் உரைகளும் புராணங்களும் நடைமுறைக் காட்சிகளும் அப்பிரிவைக் காட்டின. ஆதலால், “இந்நாட்டு வழக்கம் பற்றி அவ்வச் சாதிக்குரிய தொழிலை விளக்குதும்” என வரைவாராயினார் (182). “வன்னியர் மன்னர் வணிகர் சூத்திரர்” எனத் தொடங்குகிறார். வன்னி - நெருப்பு; வன்னியர் தீ வளர்த்து வேள்விபுரியும் மறையவர்.

ஒவ்வோர் அதிகாரத்தின் நிறைவிலும் இவ்வதிகாரத்து மேற்கோள் இத்துணை எனச்சுட்டுதலை மரபாகக் கொள்கிறார். எழுத்து (80) சொல் (118) பொருள் (40) யாப்பு (164) அணி (56) என்பன அவை.

உரைநடை

இவர் தம் உரைநடை நயமும் செறிவும் சிறப்பும் அறிய ஒரு சான்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/435&oldid=1474532" இலிருந்து மீள்விக்கப்பட்டது