பக்கம்:இலக்கண வரலாறு.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

407

புக்கும் செயலாற்றினர். வேந்தர், படைஞர் உடனாய் ஒன்றிப் பணி பூண்டனர், ஆகலின் அவர் காலத்துப் புறத்திணைப் பொருள் சிறப்பப் போற்றப்பட்டதுடன், புறநானூறு பதிற்றுப்பத்துப் போலும் புறத்திணை இலக்கியங்களும் மலர்ந்தன. இடைக்காலப் பிற்காலங்களில் புலவர்கள் நிலை ஒடுங்கியது. அரண்மனையுள்ளும் அரசவையுள்ளும் இருந்து அவரைக் களிப்பூட்டும் பாடல்களை— குறிப்பாக அகத்துறைப் பாடல்களைப் பாடுபவராக அமைந்தனர். அதனால் புறப்பொருள் இலக்கணமும், இலக்கியமும் பெருகுதலின்றி நின்றன. தொல்காப்பியத்தின் பின்னர் ஐயனாரிதனாராம் சேரவரசர் பாடிய புறப்பொருள் வெண்பாமாலையே புறப்பொருள் இலக்கண நூலாயிற்று. இலக்கண விளக்கத்து வரும் புறத்திணை, தொல்காப்பியத் தொகையும் வெண்பாமாலைத் தொகையுமன்றிப் புதுவது அன்றாம். எஞ்சிய வீரசோழியம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியமாம் ஐந்திலக்கண நூல்களின் புறத்துறைப் பகுதிகளின் அளவைப் பார்க்க இவ்வுண்மை புலனாம். புறத்துறை இடைக்கால—பிற்காலங்களில் நிகழ்ந்தில என எவரும் கூறார். “தென்னாட்டுப் போர்க்களங்கள்” என்று வெளிவந்துள்ள நூலில் உள்ள போர்களின் எண்ணிக்கையைக் கண்ட அளவானே போரற்ற அமைதி கொண்டிருந்தது தமிழகம் என எவரும் எண்ணார்! போரிலா நாடு புவிக்கண் ஒருகால் இனிமேல் தோன்றலாமே அன்றித் தோன்றி நின்றதில்லை.

அகவொழுக்க இயலில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை எனப் புறத்திணை எட்டெனக் கூறி அவ்வெட்டையும் ஓரடி, ஈரடி நூற்பா எட்டனால் கூறிய அளவில் நின்று விடுகிறார் முத்துவீரர்.

யாப்பதிகாரம்

யாப்பதிகாரச் செய்யுளியலில் இவர் சவலை வெண்பா என ஒன்றனைக் கூறுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/452&oldid=1471541" இலிருந்து மீள்விக்கப்பட்டது