பக்கம்:இலக்கண வரலாறு.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408


"அட்டாலும் பால்சுவையில் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லார்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்"

என்றும் பாட்டில் இரண்டாம் அடி இறுதிச் சீர் தனிச்சொல் இன்றி வருதலால் இதனைச் சவலை வெண்பா எனப் பின்னவர் எடுத்துக் காட்டுவதுண்டு. அந்நிலையில் இதற்கு இலக்கணம் வகுத்தற்குத் தூண்டப் பெற்றிருக்கலாம். முன்னரும் இதனை அறிந்துளோம்.

"இருகுறள் சவலை ஒருவிகற் பாகும்"

என்பது இவர் நூற்பா (908). அதற்குச் சிதம்பரச் செய்யுட்கோவையில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்;

"திருமுடியிற் கண்ணியும் மாலையும் பாம்பு
திருமார்பில் ஆரமும் பாம்பு
திருவரையிற் கட்டிய கச்சையும் பாம்பு
பொருபுயத்திற் கங்கணமும் பாம்பு"

இவர் இவ்வதிகார ஒழிபியலில் பாட்டியல் செய்திகளையெல்லாம் விரித்துக் காட்டுகிறார். சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூறு காட்டி இலக்கணமும் கூறுகிறார்.

அணியதிகாரம்

அணியதிகாரத்தில் சொல்லணிக்கு முதன்மை தருகிறார். சித்திரக்கவி, மடக்கு, திரிபு என்பவை பேராட்சி செய்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. போட்டி போட்டுக் கொண்டு சொல்லணியில் புலவர் காலம் தள்ளிய காலம். புரியாத அளவுக்குப் பாட்டுப் பாடப் பாடப் புலமைச் சிறப்பு என்னும் போலிமை தவழ்ந்த காலம். இது வீரமாமுனிவர் காலத்திலேயே நாட்டு நடைமுறையில் இருந்த காரணத்தால் அவர் சொல்லணிக்கே முதன்மை தந்து அணியிலக்கணம் படைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/453&oldid=1474730" இலிருந்து மீள்விக்கப்பட்டது