பக்கம்:இலக்கண வரலாறு.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

409

அவர் வழி இவர்க்கு வழிகாட்டியாக இருந்திருக்கக் கூடும். பொருளணிகளாக இவர் கூறுவன 58.

இவற்றுள் தண்டியலங்காரத்தில் கூறப்படாத அணிகள் : பலபடப் புனைவணி, கூடாமை அணி, தகுதியின்மையணி, தகுதியணி, பெருமையணி, சிறுமையணி, ஒன்றற்கொன்றுதவியணி, சிறப்பு நிலையணி, முறையில் படர்ச்சியணி, ஒழித்துக் காட்டணி, கூட்டவணி, இன்பவணி, துன்பவணி, அகமலர்ச்சியணி, இகழ்ச்சியணி, வேண்டலணி, மறையணி, பொதுமையணி, மறையாமையணி, உலக வழக்கு நவிற்சியணி, வல்லோர் நவிற்சியணி என்பன (முத்துவீரியம்; ஆராய்ச்சி முன்னுரை. பக். 22).

உரை

முத்து வீரியத்தின் உரையாசிரியர் திருப்பாற்கடல் நாதன் கவிராயர் என்பவர். இவர் நெல்லைப் பதியினர். இவர் காலம் நூலாசிரியர் காலமே. சமயம் சைவம். இவர் இரேனியசு ஐயர் என்னும் செருமானியக் கிறித்தவத் தொண்டருக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர். அரிய ஏட்டுச் சுவடிகளைத் தம் வீட்டில் வைத்திருந்து பதிப்பிப்பவர்களுக்குப் பரிந்து உதவிய பெருமைக்குரியவர். கவிராச நெல்லையப்பர் ஏடுகளும் இவர்தம் ஏடுகளும் தமிழ் வளம் சேர்த்த ஏடுகளுள் குறிப்பிடத்தக்கவை.

இவருரை பொழிப்புரை; சுருக்கமான உரை; வழக்கமாகப் பிறர் காட்டும் எடுத்துக் காட்டுகளை மட்டுமே காட்டாமல், திருவிளையாடற் புராணம், கலிங்கத்துப் பரணி, பெரிய புராணம், சிதம்பரச் செய்யுட்கோவை ஆகியவற்றில் இருந்து இவர் எடுத்துக் காட்டுத் தருவது குறிப்பிடத் தக்கது.

தொகைவகையால் கூறப்பட்ட அகத்துறைகளுக்கு நல்ல விளக்கம் தருகிறார். அவ்விளக்கம் திருக்கோவையாரை உட்கொண்டு கூறுவதாக அமைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/454&oldid=1474731" இலிருந்து மீள்விக்கப்பட்டது