பக்கம்:இலக்கண வரலாறு.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

425

என்பது காப்புப் பாடல். தம் தனித்தன்மையையும் அது திருவருளால் நிகழ்ந்த தென்பதையும் சுட்டுகிறார். ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும்:

“மன்னுபுகழ் நெல்லைநகர் வாழ்முருக தாசனெனப்
பன்னுதண்ட பாணிப் பரதேசி — உன்னும்
குறுமுனிவன் தன்னருளால் கூறுமிந்த நூற்பேர்
அறுவகையி லக்கணமா மே”

எழுத்திலக்கணத்தில் உரு ஓசை இயல்பு, நிலையியல்பு, புணர்ச்சி இயல்பு என மூவியல்பு கொண்டுளார்.

உரு ஓசை இயல்பில் அகர முதல் னகரம் ஈறாம். எழுத்துகளின் உருவத்தையும் ஒலியையும் இவர் கூறுதல் புதுமையாகத் திகழ்வதுடன், எழுத்து வடிவக் காப்பாக என்றும் போற்றிக் கொள்ள வாய்ப்பதுமாம்.

அகர ஆகார உருவும் ஓசையும் பற்றிய நூற்பா

“ கிளிமுகம் போலச் சுழித்துக் கீழ்க்கொணர்ந்
திடப்பால் நீட்டி மேல்வளைத் திடைவெளி
அமைதர வலத்தீர்த் தம்முகம் அடங்க
மேலீர்த் தம்முறை கீழும் ஈர்த்தல்
அகரக் குறியாம் ஆனிளங் கன்றிற்
கிரங்கலில் மூலத் தெழும்காற் றுணைக்கொடு
சிறிது வாய்திறந் தொலிக்கும்; அக்குறியின்
ஈற்றில் வரைநுனி யிலங்க வலந்தொட்
டிடம்வரை சுழித்தல் ஆகாரத் தியல்பாம்
அவணெழுந் திருமடங் காமிதன் தொனியே”
(7)

சுழி போடுதல், சுழியைக் கீழே கொண்டு வருதல், இடப்பக்கம் நீட்டல், மேல் வளைத்தல், இடைவெளி அமைய வலப்பக்கம் இழுத்தல், இழுத்த கோடு நீளாமல் அடங்குமாறு மேலே இழுத்தல்; அவ்வாறே கீழும் கோடு இழுத்தல் — இவை அகர வடிவாகும். இளங்கன்றுக்கு இரங்கும் ஆவின் உணர்வொடு கூடிய மூலக்காற்று சிறிது வாய் திறந்த அளவான் வெளிப்படுதல் ஒலி வடிவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/470&oldid=1474751" இலிருந்து மீள்விக்கப்பட்டது