பக்கம்:இலக்கண வரலாறு.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426

முன்னே சொல்லிய அகர வடிவின் இறுதியில் மலையின் சரிவென விளங்குமாறு வலத்திலிருந்து இடம் வரை சுழியிடல் ஆகார வடிவாகும்; அவ்வாவின் ஒலி இரு மடங்காதல் ஒலியாகும்.

எழுத்தை ஓவியமாக்குதல் இங்குப் புலப்படும். இம் முயற்சியில் தொல்காப்பியர் ஊன்றியிருப்பின் வடிவம், அதன் மாற்றம் பற்றிப் பலப்பலரும் பலப்பல பேசும் ஒரு நிலை தோன்றியிருக்கவே முடியாது போயிருக்கும் என்பது தெளிவாம்.

இப்பகுதியிலேயே தமிழ் எண்களைப் பற்றியும் அவற்றின் எழுத்து வடிவம் பற்றியும் விரிவாக வரைகின்றார் (36 58). இனி எழுத்தின் நிலையியல்பு, புணர்ச்சி இயல்பு என்பவற்றுடன் எழுத்திலக்கணத்தை நிறைவு செய்கின்றார்.

சொல்லிலக்கணத்தில் பொது இயல்பு, பிரிவு இயல்பு சார்பியல்பு, திரிபியல்பு என நான்கு இயல்புகளைக் கூறுகிறார்.

சொற்களைத் தனிப்பொறி, புணர்பொறி என இரண்டாக்குகிறார். தறை, தரை; உழி, உளி; வனம் வநம் — இவற்றை இருவகையாக எழுதியும் பேசியும் வருதல் பொருந்தாது என்கிறார். எதுகை கருதியும் இதனைப் பயன்படுத்தல் ஆகாது என்பது இவருட்கிடை போலும். ஏனெனில் எதுகைக்கெனப் பெரும் புலவரும் பயன்படுத்தியுள்ளனர் ஆகலின். சில திரிபுச் சொற்கள் உரைநடை, வண்ணம், நாடகம் ஆகியவற்றில் வரினும் செய்யுளில் வாராமை வேண்டும் என்கிறார் (5) மருமகன், மருகன் ஆதலையும் துளவு துழாய் ஆதலையும் திரிபென ஏற்கிறார். வாழ் நனை வாணன் எனத் திரிப்பதைப் பிழை யென்கிறார் (87).

பொருளிலக்கணம்; அகப்பொருளில், உறுப்பியல்பு, குறிப்பியல்பு, பழமையியல்பு, துறையியல்பு, என்பனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/471&oldid=1474753" இலிருந்து மீள்விக்கப்பட்டது