பக்கம்:இலக்கண வரலாறு.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46. தமிழ் நூல் (தமிணூல்)


இந்நூல் பாவும் உரையும் கொண்டது. முழுத்தமிழ் எழுத்து சொல் தொடர்ப் புதுவிலக்கணம் என்னும் குறிப் புடையது. “பா நூற்று உரை யியற்றுதன் இலக்கணப்புலவன் த. சரவணத்தமிழன்” என்னும் பொறிப்புடையது. திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றக வெளியீடாக 1972 இல் வெளிவந்தது. (தி.பி. 2003) வாழும் புலவர் இவர். பெயருக்கு ஏற்பத் தமிழராகவே அமைந்தவர்.

நூன்முகப்பில் படையற்பா, கடமைப்பா, கிழமைப்பா, நன்றிப்பா என நாற்பாவுடையது. நூல் எழுத்தியல், சொல்லியல், உறுப்பியல், புணரியல், பொதுவியல், ஒழிபியல், தொடரியல் என ஏழியல்களையுடையது. மொத்த நூற்பாக்கள் 433. முன்னும் பின்னும் சேர 445 நூற்பா.

“பழமை புடைத்துப் புதுமை தூற்றி
முழுமை கொள்ளச் சமையல் செய்த
தமிழ்நூல் என்னுமிவ் விலக்கண உணாவை
உலகம் முழுதும் உறையும்
தமிழர்க் கமையப் படையல்செய் வேனே”

எனப் படைக்கிறார். இது முன்னின் முன்.

“பாரையே மயக்கிய மாமொழிப் புரட்டாம்
ஆரிய வேரைப் பீறிய அரிமா
ஞா.தேவ நேயப் பாவாணர் நூல்கள்
ஆவலும் அறிவும் தமிழினில் ஆக்கும்”

என்பது பின்னின் பின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/481&oldid=1474837" இலிருந்து மீள்விக்கப்பட்டது