பக்கம்:இலக்கண வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

“பெரும் புலவன் தனது உணர்வு மாட்சியில் பிண்டம் படலம் ஓத்து சூத்திரம் என்னும் யாப்பு நடை படக்கோத்தல் ஆயிற்று” என விரித்துரைக்கிறது.

தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர், “வினையின் நீங்கி விளங்கிய அறிவனாலே வழுக்களைந்து எஃகிய இலக்கணங்களை யெல்லாம் முதலும் முடிவும் மாறுகோள் இன்றாகவும் தொகையிலும் வகையிலும் பொருண்மை காட்டியும் உரையும் காண்டிகையும் உள் நின்று அகலவும் ஈரைங் குற்றமும் இன்றி ஈரைந்தழகு பெற முப்பத்திரண்டு தந்திர உத்தியோடு புணரவும் ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தாலும் இனமொழி கிளந்த ஓத்தினானும் பொது மொழி கிளந்த படலத்தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத்தானும் ஒரு நெறிப்படப் புணர்க்கப்படூஉம் தன்மை உடைமையின் என்க” என்று மேலும் விரித்தெழுதுவார். இவற்றை நோக்க நூல் என்பது இலக்கணத்தின் குறியீடே என்பது தெளிவுற விளங்கும். ‘நூன்முறை’ என்பதும் அதுவே. நூலின் இயல்பு நன்னூலில் ஒரு நூற்பாவாகவே இயல்கின்றது (4).

நூல் என்பது இடுகுறியன்று. அது நன்னூலார் முதலாம் பின்னூலார் காலந்தொட்ட வழக்கு.

நுவல்வது யாது, அது ‘நூல்’ என்க. “நூலே நுவல்வோன் நுவலுந்திறனே”, “நூலின் இயல்பே நுவலின்”, “நூல் பயில் இயல்பே நுவலின்” என வருவனவற்றால் நூலுக்கும் நுவலுதலுக்கும் உள்ள தொடர்பு புலனாம். நுவலப்பட்டது நூல் என்க. இலக்கணம் கூறுதலே பண்டு நுவலுதல் எனப்பட்டது என்பது இதனால் விளக்கமுறும்.

புலன்: புலன் என்பதும் இலக்கணம் என்னும் பொருளதாம். இலக்கண வல்லுநரைப் ‘புலன் நன்குணர்ந்தோர்’ என்பதும் தொல்காப்பிய நடையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/49&oldid=1480833" இலிருந்து மீள்விக்கப்பட்டது