பக்கம்:இலக்கண வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv


இலக்கண வரலாறு பேராசிரியர் கவிஞர் மு. அண்ணாமலை அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி என் இனிய நண்பர் சோம. இளவரசு அவர்கள் முதன் முதலில் 1961-இல் சிறப்பாக எழுதினார்கள். அதனைத் தொடர்ந்து இப்பொழுது நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் அறிஞர் இளங்குமரன் அவர்கள் மிக விரிவாக இலக்கண வரலாறு எழுதியுள்ளார்கள். அரிய நூல்கள் வெளியிடும் திட்டத்தில் இந்த விரிவான இலக்கண வரலாறு வெளிவருகிறது. ஆராய்ச்சிக்கு அருந்துணையாக அமையும் இவ்வகை நூல்களை வெளியிடுவதன் மூலம்தான் பதிப்பகம் தமிழ் மொழிக்குத் தலையாய தொண்டு செய்ய முடியும் என்று கருதுகிறேன். நல்லாசிரியர் எழுதும் அரிய நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இடையறாது வழங்கவேண்டும் என்ற இனிய இலட்சிய நோக்கில் இலக்கண வரலாறு வெளியிடப் பெறுகிறது.

இந்நூலில் இலக்கணத்தின் இயல்பும் பயனும் மொழிக்காப்பும் மிக விரிவாக நுட்பமாக விளம்பப்பெற்றுள்ளன. முந்து நூல்களின் அமைப்பும் அழகும் அழகாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. மறைந்த இலக்கணங்களின் மாட்சியும் வழக்கில் இல்லாத இலக்கண நூல்களின் இயல்பும் இலக்கணம் படைத்த ஆசிரியர்களின் பேரறிவும் பேராற்றலும் நன்கு விளக்கப்பெற்றுள்ளன. இலக்கணங்களைத் தம் உரைகள் மூலம் காத்த உரையாசிரியர்களின் உயர்வற உயர்ந்த அறிவு நலன்களையும் ஆசிரியர் தக்க சான்றுகளுடன் நிறுவிய திறன் கற்கும்தோறும் கற்கும்தோறும் களிப்பு நல்குவன. வளமான மொழிக்கு அமைந்த பல்வகை இலக்கணங்களின் வரலாற்றையும் வளமான தமிழில் வகுத்தளித்து வழங்கியுள்ளார். அவற்றின் சீர்மையும் சிறப்பும் விளக்கப் பெற்றுள்ளன. தமிழ் இலக்கணம் வளர்ந்த வரலாறு வரலாற்று நோக்கில் ஆராயப்பெற்றுள்ளது. ஒரு சீரிய இலக்கண வரலாறு எவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/5&oldid=1508017" இலிருந்து மீள்விக்கப்பட்டது