பக்கம்:இலக்கண வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


“இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே
எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்”

எண்ணெய் என்னும் பெயரே எள் நெய் என்பதன் வழி வந்தது தானே! அவ்வாறாக எள்னே இல்லாமல் எண்ணெய்ப் பெயர் தானும் வந்திராதே. எள்ளும் எண்ணெயும் கொண்டுள்ள இயைபு போலவே இலக்கியமும் இலக்கணமும் இயைபுடையவை என்க. எள், எள்நெய் என்பவற்றின் முதனிலை ‘எள்’ என இருப்பது போலவே, இலக்கியம் இலக்கணம் என்னும் இரண்டன் முதனிலைகளும் ‘இலக்கு’டன் இருத்தல் எண்ணி மகிழத் தக்கதே!

“குறிக்கோள் இலாது கெட்டேன்” என்பது நாவுக்கரசர் தேர்ச்சியுரை; உலகோர் தெளிவுறு தற்காக உரைத்த உரை. அவ்வாறே - ‘இலக்கு’ என்னும் முதனிலை இலக்கிய இலக்கணங்களின் படைப்பு, படிப்பு ஆகியவற்றின் அடிப்படையை அருமையாய் விளக்கி நிற்றல் கண்டு கொள்ளத்தக்கதாம்.

பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்

எனப்படுமாறு உரைத்துப் பயன் வழிகாட்டும் பொய்யர் மொழியை உணர்ந்தார், பயனில செய்வரோ? ஆகவே இலக்கில் தளிர்த்த பயன் மரத்திலிருந்து கனிந்த கனியே இவக்கணம் என்க.

“கோழி முந்தியதா? முட்டை முந்தியதா?” என்பது போலவோ “மரம் முந்தியதா? விதை முத்தியதா?” என்பது போலவோ வினாவி வினாவித் தடுமாறும் நிலையதன்று இலக்கிய இலக்கண முதன்மை ஆய்வு! தெளிவு உடையது அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/52&oldid=1471348" இலிருந்து மீள்விக்கப்பட்டது