பக்கம்:இலக்கண வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

2. முந்து நூல்


நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் பழமையானது தொல்காப்பியம். அந்நூலின் பாயிரம், “முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி”, தொல்காப்பியம் செய்யப் பட்டதாகக் கூறுகின்றது. அப்பாயிரம் பாடிய பனம்பாரனார் தொல்காப்பியனார்க்கு ஒரு சாலை மாணவர். அவர் கூறிய முந்து நூலைக் காண்பது இப்பகுதி.

பனம்பாரனார் ‘முந்து நூல்’ என்றாரே யன்றி, இன்ன நூல் என்றாரல்லர். ‘முந்து நூல்’ என்பது கால முன்மை சுட்டிய பொதுக் குறிப்பேயன்றி, ‘இன்ன இன்ன நூல்’ என்றும் சிறப்புக் குறிப்புடையதன்று. பாயிரம் பொது வகையில் கூறினும், நூலில் யாண்டேனும் முந்து நூல் இன்னதென்றும் குறிப்பு இருப்பின், அதனைக் கொண்டு அறிந்து கொள்ள வாய்க்கும். அவ்வாய்ப்பும் இல்லாக்கால், அறுதியிட்டு உரைப்பது பொருந்துவதாய் அமையாது என்பதே உண்மையாம்.

உரையாசிரியர் என்னும் பெயருடைய இளம்பூரணரே தொல்காப்பிய நூலின் முதல் உரையாசிரியர். அதனாலேயே அவர் அப்பெயர் பெற்றார். அவர் “முந்து நூல்” என்பதற்கு, “முதல் நூல்” என்று பொருளும், “முந்து நூல் கண்டு எனவே வழியும்”, என்று விளக்கமும் வரைந்தார். “தமிழ் கூறும் நல்லுலகம்” என்னும் பாயிரத் தொடர்க்கு, “தமிழ் கூறும் நல்லாசிரியரது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/55&oldid=1474545" இலிருந்து மீள்விக்கப்பட்டது