பக்கம்:இலக்கண வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

வெள்ளூர்க் காப்பியனும் சிறுபாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக் கோமானும் கீரந்தையும் என இத் தொடக்கத்தார் ஐம்பத் தொன்பதின்மர் என்ப” என அவ்வுரையே கூறுகின்றது. அவ்வுரையை அவ்வாறே வழி மொழிவதென அடியார்க்கு நல்லார் உரையும் அமைந்துள்ளது. (சிலப். உரைப் பாயிரம்). ஆக, நச்சினார்க்கினியர் காலத்துக்கு முன்னரே ‘அகத்தியம்’ முந்து நூல் என்னும் எண்ணம் பலர்க்கு இருந்ததென்பது தெளிவாகின்றது. இதனைப் பற்றிய செய்தியை ‘அகத்தியர்’ என்னும் தலைப்பில் காணலாம். இவண் தொல்காப்பியம் கொண்டு ‘முந்து நூல்’ ஆய்வைத் தொடர்வோம்.

‘முந்து நூல்’ என்பது ஒரு நூல் அன்று; பல நூல்கள்; பலதிறப் பலதுறை நூல்கள். அவை பல்கிக் கிடந்தமையாலும் அவற்றுள் ஒரு நூலைக் கொண்டு அல்லது ஒரு நூலைத் தழுவித் தொல்காப்பியம் செய்யப்படாமையாலும் இன்ன நூல் என அவர் சுட்டினார் அல்லர். பனம்பாரரும் குறித்தாரல்லர்.

என்ப, என்மனார், என்மனார் புலவர், மொழிப, மொழிமனார், மொழிமனார் புலவர், வரையார் என்பவற்றை மட்டும் ஏறத்தாழ 300 நூற்பாக்களில் கூறுகிறார் தொல்காப்பியர்.

மேலும், உயர்ந்திசினோர், உணருமோர், அறிந்திசினோர், தெரியுமோர், தெளியுமோர், புலமையோர், புலனுணர்ந்தோர், சிறந்திசினோர், இயல்புணர்ந்தோர் குறியறிந்தோர், வகுத்துரைத்தோர், நேரிதின் உணர்ந்தோர், வயங்கியோர், வல்லோர் என்றெல்லாம் முந்து நூலாரைக் குறிக்கிறார்.

நூல்வல்ல அப்புலவர்களை நல்லிசைப் புலவர், உயர் மொழிப்புலவர், தொன்மொழிப் புலவர், நூல் நவில் புலவர், வாய்மொழிப் புலவர், யாப்பறி புலவர், நுனித்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/57&oldid=1474549" இலிருந்து மீள்விக்கப்பட்டது