பக்கம்:இலக்கண வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

கிளவி', 'தொன்றியல் மருங்கின் செய்யுளுள்', ‘தொன்மொழிப் புலவர்’, 'வழக்கியல் மரபு', 'நாட்டியல் மரபு', ‘கெடலரும் மரபு’, 'மரபு நிலை திரியா மாட்சி' எனவரும் தொல்காப்பிய ஆட்சிகளை ஆய்வார் முன்னையோர் மரபுகளின் விரிவையும், அவற்றையெல்லாம் கண்டு கண்டு தொகுத்துக் கொண்ட தொல்காப்பியர் திறனையும் போற்றத் தவறார்.

இனி நூன்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு, மரபியல் என்று இயல்களில் வரும் மரபாட்சிச் சிறப்பு தொல்காப்பியம் தொன்மரபு காக்க எழுந்த நூல் என்பதைத் தெளிவுறுத்தும்.

தொல்காப்பியர் தமக்கு முன்னை மூதறிஞர் பலர் முதனூல் செய்தமையும், அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தாம் வழிநூல் செய்தமையும் விளங்க,

“மரபு நிலை திரியா மாட்சிய வாகி
உரைபடு நூல்தாம் இருவகை இயல
முதலும் வழியுமென நுதலிய நெறியின”

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்”

“வழியெனப் படுவது அதன்வழித் தாகும்”

“வழியின் நெறியே நால்வகைத் தாகும்”

“தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலொ டனைமர பினவே”

என மரபியலில் நூற்பாக்கள் அமைத்துள்ளார். தம் நூலைத் தாமே "முதல் நூல்" என்பார் என்றோ, தம்மைத் தாமே வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்" என்பார் என்றோ எவரும் எண்ணார். ஆதலின், முந்து நூல் செய்தாரை இத்துணை மதித்துப் போற்றும் தொல்காப்பியனார் தம் ஆசிரியர் அகத்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/60&oldid=1471355" இலிருந்து மீள்விக்கப்பட்டது