பக்கம்:இலக்கண வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

“பூமலி நாவன் மாமலைச் சென்னி
ஈண்டிய இமையோர் வேண்டலிற் போந்து
குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த்
தலைகடல் அடக்கி மலையத் திருந்த
இருந்தவன் தன்பால் இயற்றமிழ் உணர்ந்த
புலவர்பன் னிருவருள் தலைவன் ஆகிய
தொல்காப்பியன்”

(உ)என்பது நம்பியகப் பொருளின் பாயிரப் பகுதி.

“வடதிசை யிருந்து தென்மலைக் கேகி
மதிதவழ் குடுமிப் பொதிய மால்வரை
இருந்தவன் தன்பால் அருந்தமிழ் உணர்ந்த
பன்னிரு புலவரின் முன்னவன் பகர்ந்த
தொல்காப் பியநெறி”

என்பது தண்டியலங்காரப் பிரதியில் உள்ளதெனப் பெருந்தொகை காட்டும் பாயிரப் பகுதி (1564). யாப்பருங்கலக் காரிகையின் அவையடக்கப் பாடலும்,

“கானார் மலயத் தருந்தவன் சொன்ன கன்னித் தமிழ் நூல்” எனக் குறிக்கிறது.

கம்பர் காலத்திலும், திருவிளையாடற் புராணத்தார் காலத்திலும், தலபுராணங்களைப் பாடிக் குவித்தோர் காலத்திலும் வரவரப் பெருகி, அகத்தியரே தமிழின் மூலவர், அவர் செய்ததே அகத்தியப் பேரிலக்கணம் என்னும் கருத்து நிலைபெறுவதாயிற்று. நாட்டியற் பாவலர் பாரதியாரும்,

“ஆதிசிவன் பெற்று விட்டான் — என்னை
       ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே—நிறை
       மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”

என்று பாடத் தூண்டியது, அகத்தியரைப் பற்றிப் பரவிக் கிடந்த செய்திகளேயாம். ஆதியிற்றமிழ் நூல் அகத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/67&oldid=1476698" இலிருந்து மீள்விக்கப்பட்டது