பக்கம்:இலக்கண வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அவரும் தென்திசைக்கண் போதுகின்றவர் கங்கை யாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர் யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரண தூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரஇ, பெயர்ந்து, துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின் கண் இருந்து இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித் திரண தூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி, 'நீ சென்று குமரியாரைக் கொண்டு வருக' எனக் கூற, அவரும் ‘எம் பெருமாட்டியை எங்ஙனங் கொண்டு வருவல்?’ என்றார்க்கு, 'முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளம் அகலநின்று கொண்டு வருக' என அவரும் அங்ஙனம் கொண்டு வருவழி, வையை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டு போகத் தொல்காப்பியனார் கட்டளையிறந்து சென்று ஓர் வெதிர்ங்கோலை முறித்து நீட்ட அது பற்றி ஏறினார்; அது குற்றமென்று அகத்தியனார் குமரி யாரையும் தொல்காப்பியனாரையும் ‘சுவர்க்கம் புகாப்பிர்’ எனச் சபித்தார்; 'யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெருமானும் சுவர்க்கம் புகாப்பிர்' என அவர் அகத்தியனாரைச் சபித்தார். அதனான் அவர் வெகுண்டாராதலின் ‘அவன் செய்த நூலைக் கேௗற்க’ என்றார் என்க என்பது.

தொல்காப்பியம் ‘நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்பான் அவையில் அரங்கேறியதாகப் பாயிரம் கூறுகின்றது. 'நிலந்தரு திருவின் நெடியோன்' என ஒரு வேந்தனும் புறப்பாடலில் இடம் பெற்றுள்ளான். நச்சினார்க்கினியரோ 'பாண்டியன் மாகீர்த்தி' என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/71&oldid=1471372" இலிருந்து மீள்விக்கப்பட்டது