பக்கம்:இலக்கண வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

“கீர்த்தி மிகு புகழ்” என்பது தொல்காப்பியம், ‘கீர்த்தி’ என்னும் சொல் ஆளப் பெற்றிருத்தலை விலக்கி, அவனே நிலந்தரு திருவிற் பாண்டியன் எனக் கொண்டாலும் அவன் 24 ஆயிரம் ஆண்டு வீற்றிருந்தான் —ஆட்சி செய்தான் என்பது பொருளொடு கூடியதாகுமா?

இறையனார் களவியலுரை கூறும் முச்சங்கங்களின் முழுக்காலமுமே ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு ஆண்டுகள். அக்காலமும் புனைவு என்பதே ஒரு தலை. ஆகவும், அதனை ஏற்பினும், அக்காலத்து ஆட்சி செய்த வேந்தர்கள் நூற்றுத் தொண்ணூற்று எழுவர் என்பார். ஒரு வேந்தன் ஆட்சிக் காலம் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளே! இவ்வாறாக நச்சினார்க்கினியர் கூறும் வேந்தன் தன் ஆட்சியில் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்து முதற்சங்கம் தொடங்கி, அதே வேந்தன் ஆட்சி நிறைதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே மூன்றாம் சங்கமும் முடிந்திருக்க வேண்டும்! பொருத்தும் செய்தியா இது?

துவராபதியினின்று புதினெண் கோடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொணர்ந்தனராம் அகத்தியனார். கி.பி. 1915இல் இருந்து 1920 ஆம் ஆண்டுக்குள் பாரதியார் பாடிய பாடலில் இந்தியப் பரப்பெல்லாம் கூட்டி. “முப்பதுகோடி முகமுடையாள்”, “முப்பது கோடி முழுமைக்கும் சுதந்தரம்” என்று பாடுகிறார். பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னே தமிழ் நிலத்துக்குப் பதினெண் கோடி வேளிரையும், அவரலா அருவாளரையும் அகத்தியர் கொணர்ந்தனர் என்றால் எத்தகு உண்மையாக இருக்கும்?

இனித் தொல்காப்பியனார் பெயரோ திரணதூமாக்கினியாம்; யமதக்கினியார் மகனாராம். அஃதுண்மையானால் பரசுராமர் உடன் பிறந்தார் தொல்காப்பியராதல் வேண்டும். அவர் வரலாற்றிலோ யமதக்கினியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/72&oldid=1471373" இலிருந்து மீள்விக்கப்பட்டது