பக்கம்:இலக்கண வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

கிறார். இது குழப்பத்தை உண்டாக்குகிறது. இதனால் பிற்காலத்திலே அகத்தியர் பெயரினால் சில இலக்கண நூல்கள் இயற்றப்பட்டிருந்தன என்பது தெரிகிறது.

சிதம்பரப் பாட்டியல் வழியே அறியப்படுவது ‘அகத்தியர் பாட்டியல்’ என்பது.

“பாமேவு தமிழ்ப்பொதியக் குறுமுனிவன் கூறும்
பாட்டியலைச் சுருக்கமதாய்ப் பகர்ந்திடுவென் யானே”

என்கிறது அது. பாட்டியல் மிகப் பிற்பட்ட கால நூல் வகையினது. அதன் முதனூலாக அறிவது பன்னிரு பாட்டியல். அப்பாட்டியலில் சொல்லப்படும் புலவர்களுள் சிலர் சங்ககாலத்தவர்களாக அறியப் பெறுவர். அப்பழம் புலவர்கள் பெயரால் கட்டிவிட்டவை போலவே, அகத்தியர் பெயரால் கட்டிவிட்ட பாட்டியல் ஈதென்க. இதனை மெய்ப்பிக்கத் திருவள்ளுவமாலை ஒன்று போதாதா? சங்கப் புலவர்கள் பெயரால் பிற்காலத்தில் எவரோ கட்டிவிட வில்லையா?

அகத்தியரைப் பற்றி வழங்குகின்ற கதைகளையும் செய்திகளையும் நோக்க, வடநாட்டில் அகத்தியர் பலர் இருந்தனர் என்றும், அவருள் ஒருவர் தென்னாட்டிற்கு வந்தவர் என்றும், அவ்வொருவர் மேலே வடநாட்டில் வழங்கப்பட்ட அகத்தியர் பற்றிய செய்திகள் எல்லாம் சூட்டப்பட்டன என்றும், அக்கதைகள் தென்னாட்டிலும் பெருவழக்காகி உரையிலும் பாட்டிலும் புகுந்தன என்றும், அவ்வகத்தியர் பெயரால் எவரெவரோ நூல்கள் இயற்றினர் என்றும், அகத்தியத்தின் வழியே நூல் செய்தேம் என்பதை நூலாசிரியர்கள் பெருமையாகக் கருதிக் கொண்டனர் என்றும், அகத்தியர் பெயரால் வழங்கும் பேரகத்தியத் திரட்டு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் ஒருவர் இயற்றியது என்றும், நாம் தெளியலாம்.

இ- வ-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/78&oldid=1471385" இலிருந்து மீள்விக்கப்பட்டது