பக்கம்:இலக்கண வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

அணிந்துரை

மூதறிஞர் செம்மல்

வ. சுப. மாணிக்கம் பிஎச்.டி., டி.லிட்டு.,

எல்லா மொழிக்கும் இலக்கிய வரலாறு எழுதமுடியும், ஆனால் இலக்கண வரலாறு எழுதும் தகுதிப்பேறு ஒரு கை விரலினும் குறைந்த மொழிகட்கே யுண்டு. வடமொழியும் தமிழும் இலக்கண வரலாறு எழுதத்தக்க அருட்செல்வமுடையவை. இவ்விரண்டனுள் வடமொழிக்கோ இலக்கண வரலாற்றில் வளர்ச்சியில்லை. வழக்கிலா மொழி வடமொழியாதலின், பழையன கழிதல் புதியன புகுதல் என்ற இலக்கணப்போக்கு வரவிற்கு இடனில்லை. அதன் வரலாறு பல நூற்றாண்டுகட்கு முன்பே நடுகல் போல நின்றுவிட்டது. சில இந்திய மொழிகட்கு இலக்கண வரலாறு கி. பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாகும். ஞால மொழியுள்ளும் இந்திய மொழியுள்ளும் தொன்மை புதுமை இடையறவு படாத்தன்மை எல்லாம் தழுவிய இலக்கண வரலாறு தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது.

தமிழ் மொழிக்கு இலக்கிய வரலாறு இலக்கண வரலாறு என்ற இரட்டையாறு என்று தோன்றியதெனக் காலக்குறி செய்வதற்கில்லை. இறையனார் அகப்பொருளுரையில் வரும் சங்கக் குறிப்புக்கள் மிகையன என்றாலுங்கூட, பொதுப்பட்ட உண்மைகளை ஏற்றுக் கொள்ளத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/8&oldid=1472599" இலிருந்து மீள்விக்கப்பட்டது