பக்கம்:இலக்கண வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல்:

ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப் படத்தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங்களில் கொள்ள வைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம்.


“அளபெடைப் பெயரே அளபெடை இயல”
“தொழிற்பெயரெல்லாம் தொழிற் பெயரியல”

என்பவற்றைக் காண்க,

எதுகை மோனை நயங்கள்:

எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கியமெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல்காப்பியர்.


“வஞ்சி தானே முல்லையது புறனே
எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல் குறித் தன்றே”

“ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும்”

இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க.


“மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும்
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்”

இவை அடி எதுகைகள்,


“விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே”
“நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”

முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/95&oldid=1471409" இலிருந்து மீள்விக்கப்பட்டது