பக்கம்:இலக்கியக் கலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இலக்கியக் கலை வாழ்க்கையிலேயே இலக்கியமும் முகிழ்க்கிறது என்றால், எப்பொழுது அது தோன்றிற்று என்று கேட்கத் தோன்றுகிற தன்றோ? மனிதன் சிந்திக்கத் தொடங்கிய அப்பொழுதே, இலக்கியம் தோன்றிவிட்டது. மனிதன் மிகுதியும் அறிய விரும்புவது மற்றைய மனிதனைப் பற்றித்தான் என்றால், அது புதுமையானதொன்று அன்று, காரணம் அவன் சமுதாயமாகக் கூடிவாழ விரும்பும் ஒருவகை உயிரினமானவன். பிறருடைய வாழ்க்கை, செயல், அறிவு, நினைவு, உணர்ச்சி, உள்ளக்கிடக்கை, குறிக்கோள் என்பவற்றை அறிய மனிதனுக்கு இருக்கும் ஆர்வமே இலக்கியம் தோன்றக் காரணமாயிற்று. மேலும், நம்முடைய மனத்தில் தோன்றும் அனுபவங்களையும் எண்ணங்களையும் கருத்துகளையும் நமக்குவேண்டியவர்களிடம் கூறவும் அவர்களுடைய எண்ணம் முதலியவற்றை அறியவும் நமக்கு இயற்கையாகவே விருப்பம் இருக்கிறது. இங்கனம் நமது அனுபவம் முதலியவற்றைப் பிறர்க்கு எடுத்துக் கூறுகையில் நம்மையும் அறியாமல் கொஞ்சம் கலைத்திறமையுடன் கூறுகிறோம். கலைத்திறமை என்றவுடன் ஒவ்வொருவரும் கலைஞரா என்று ஐயங்கொள்ளவேண்டா, அனுபவத்தைக் கூறுகையில், நம்முடைய உணர்ச்சியும் உடன் கலந்துதானே வருகிறது? கேட்பவர் வெறுஞ் சொற்களை மட்டுமோ கேட்கிறார்? நம்முடைய உணர்ச்சியில் அவரும் பங்கு கொள்கிறார். அதுவே இலக்கியத்தின் பிறப்பிடமாக அமைகிறது. எனவே, இலக்கியம் தோன்றுவதற்கு மூலமான காரணத்தை முன்னரே கண்டோம். இலக்கிய வகை வாழ்க்கையில் தோன்றிய வாழ்க்கைபற்றியே கூறும் இலக்கியம் எத்தனை,வகைப்படும் என்று காண்பது அடுத்துள்ள முயற்சியாகும். தனி மனிதன் வாழ்வு, அனுபவம் என்பவைபற்றிக் கூறும் இலக்கியம் ஒருவகை. மற்றொன்று மனிதன் புற உலகில் ஈடுபட்டு வாழ்ந்து வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அறிய முற்பட்டு அனுபவத்தின், அஃதாவது வாழ்வு, சாவு, குற்றம், நன்மை, தீமை, கடவுள் மனிதனுக்கும்.கடவுளுக்கும் உள்ளதொடர்பு என்பவைபற்றி நினைந்து அனுபவித்துக் கூறுவது. இவ்வகை அனுபவம் தனி. மனிதனின் சொந்தமாக இராமல் மனித சமுதாயம் முழுதுக்கும் பொதுவாக ஆகிறது. மூன்றாவதாக மனிதன் தன்னொத்த மனிதனிடம் கூடிவாழும்பொழுது பெறும் அனுபவம். நான்காவது நாம் காணும் உலகில் உள்ள இயற்கை பற்றி அறிவதும் கூறுவதும் ஆகும் இறுதியாக இருப்பது மனிதனே ஆக்கிப்படைக்கும் கலை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/82&oldid=1274213" இலிருந்து மீள்விக்கப்பட்டது