பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 புலவர் கா. கோவிந்தன்



கவலைகொண்டிருந்தனர். அக்காலத்தில், அப்பாண்டியர் குடியில் வந்து பிறந்தான் பூதப் பாண்டியன். ஒல்லையூர் நாட்டிழப்பால், தன் நாட்டிற்கு உண்டாம் கேட்டையும் தன் குடிக்கு உண்டாம் பழியையும் உணர்ந்தான்; அந்நாட்டை வென்று கைக்கொண்டு, நாட்டின் புகழையும், குடியின் பெருமையையும் குன்றாமல் காக்கத் துணிந்தான். உடனே பெரும் படையோடு சென்று, அந்நாட்டைக் கைப்பற்றி ஆண்டிருந்த சோழனை வென்று துரத்தினான். ஒல்லையூர் நாடு மீண்டும் பாண்டியர்க்கு உரியதாயிற்று. பாண்டியர்க்குப் பன்னெடு நாட்களாக இருந்த பழியைப் போக்கிப் புகழ்விளைத்த பூதப் பாண்டியன் செயலைப் பாண்டி நாட்டார் புகழ்ந்து பாராட்டினர்; அவனுக்கு விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர். அம்மட்டோ! இழந்த ஒல்லையூர் நாட்டை வென்று தந்த அவ்வெற்றிச் செயலை அவன் பெயரோடு இணைத்து, ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என அவனை அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தனர்.

பூதப் பாண்டியன் பெருவீரன் மட்டும் அல்லன்; - தன் போலும் வீரரைப் பாராட்டும் பெருங்குணமும் உடையவனாவான். பாம்பறியும் பாம்பின் கால் என்ப, வீரன் ஒருவன் பெருமையை அவன்போலும் பிறிதொரு வீரனே பாராட்டல் பொருந்தும். அவன் காலத்தில் அவன் ஆட்சிக்குரிய பொதிய மலையில் திதிய்ன் என்பானொரு வீரன் ஆட்சி புரிந்திருந்தான். விற்போர் வல்லவன்; தேர்ப்படை உடையவன்; தன் ஆட்சியின்