பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 புலவர் கா. கோவிந்தன்



மகளிர்க்குரிய கடமைகளை மறவாது எடுத்துரைப்பதே மாண்புடையார் கடனாம். தாங்கள் அக்கடமையில் தவறி விட்டீர்; அவ்வறவுரை கூறாது விட்டதே தங்கள் சான்றாண்மைக்கு இழுக்காம்; அங்ங்னமாகவும், தாங்கள் கூறாத அவ்வற நெறியினைக் கணவன்பால் கொண்ட என் அன்பையும் என் கடமையையும் காட்ட மேற்கொண்டு தீப்பாயத் துணிந்து நிற்கும் என் செயல் கண்டு, என்னைப் போற்றி, அக்கடமையில் வழுவா வாறு நின்று காப்பதையும் விட்டுத் தடுத்து நிறுத்துகிறீர்! தம் கடமை மறந்து, கடமை உணர்ந்து செய்வாரையும் தடுத்து, அக்கடமையினின்றும் வழுவுதற்காம் வழிகாணும் தங்களின் சான்றாண்மையின்பால் ஐயங் கொள்கிறேன். ஏனைப் பெண்களைப் போன்றே என்னையும் எண்ணி விடாதீர்கள். கணவன் இறந்த பின்னர்க் கைம்மை நோன்பு நோற்று வாழும் அவ்வாழ்வு வேண்டேன். கணவனோடு இறந்து கடமையிற் பிறழாக் கற்புநெறி நிற்கும் துணிவுடையேன். அத்தகைய துணிவுள்ளம் உடைய என் உடலை இத்தீத் துயர் உறுத்தாது; கணவனை இழந்து கைம்மை நோன்பு நோற்கும் அவர்க்குத் தாமரை மலர்ந்த தண்ணிர்ப் பொய்கை, காட்டுத் தீப்போல் கடுந்துயர் உறுத்தலும், கடமை உணர்ந்து கணவனோடு உயிர் துறக்கத் துணிந்தார்க்குக் காட்டுத் தீ, தாமரை மலர்ந்த தண்ணிர்ப் பொய்கை போல் குளிர்ந்து காட்டலும் உலகியல். கணவனை இழந்தார்க்குக் காட்டுத் தீயும், தாமரைப் பொய்கையும் ஒரு தன்மையவே. ஆகவே,