பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 புலவர் கா. கோவிந்தன்



கேட்கலாயினன். பாணன் ஒருவன் இவ்வாறு பண்ணன் சிறுகுடி நோக்கிச் செல்லும் காட்சியை அப்படியே படம் எழுதிக் காட்டுவது போன்று கிள்ளி வளவன் பாடிக் காட்டியுள்ளான்.

கிள்ளி வளவன் பாடியுள்ள புறநானூறு 173ஆம் பாடலில் பண்ணன் அறச்சாலையில் எழும் ஒலிக்குப் பழமரம் சேர்ந்த பறவையினங்கள் எழுப்பும் ஒலியினை உவமையாகக் கூறியுள்ளான். அறச்சாலையினின்றும் உணவு பெற்று மீளும் பாண் சிறுவர் வரிசை வரிசையாகச் செல்லும் காட்சிக்கு, மழை வரும் என அறிந்து, முட்டைகளை ஏந்திக்கொண்டு, மேட்டு நிலம் நாடி வரிசை வரிசையாக எறும்புகள் செல்லும் காட்சியினை உவமையாகக் கூறியுள்ளான். இவ்வுவமைகளின் அழகும் எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் தப்பாது மழை பெய்யும் என்ற உண்மை உரையினை எடுத்தாளும் சிறப்பும் மிகச் சிறந்தனவாம். பாணர்க்குப் பரிசில் அளித்து, அவர் பசி போக்கித் துணை புரியும் பண்ணனைப் பசிப்பினி மருத்துவன் எனப் பெயரிட்டுப் பாராட்டும் பண்பு மிக உயர்ந்ததாம். இவ்வாறு கிள்ளிவளவன் பாடல் புதுமை நலத்தில் சிறந்து விளங்குகின்றது.

நாடாளுவதில் வல்ல காவலர்கள், நற்றமிழ் வல்ல பாவலர்களாகவும் திகழ்ந்த அவர்கள், புலமைச் சிறப்பினை அறிந்து, அவர்கள் பாடல்களின் கருத்துக்களை மீண்டும் மீண்டும் படித்துப் பயன் பெறுவோமாக!