பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 21



நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை முதலிய நூல்களையும் ஆக்கி ஆராய்ந்து, அழகிய தமிழ் வளர அருந்தொண்டு புரிந்தனர். தமிழில்க்கியச் செல்வங்களை ஆக்கியும், ஆராய்ந்தும் வளர்த்தற் பொருட்டுத் தோன்றிய சங்கங்கள் இருந்த தென் மதுரையும், கபாடபுரமும் கடல் கோள்களால் அழிவுற்றன. இக் கடல் கோள் நிகழ்ச்சியைச் சிலப்பதிகாரம் பாடிய சேரர் குல இளங்கோ,

     “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
      குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”

எனக் குறிப்பாகக் கூறினர்.

தமிழ் வளர்த்த சங்கங்களின் நிலைக்களமாகிய நகரங்கள் இரண்டும் கடல் கோளால் அழிவுறவே, அந்நகரங்களில் இருந்த தமிழிலக்கியச் சுவடிகள் பலவும் அக்கடல் வாய்ப்பட்டு அழிந்தன. அதனால் அம்முதல், இடைச் சங்கங்களில் ஆக்கப் பெற்ற அந்நூல்களைக் காணும் நற்பேறு இக்கால மக்களுக்கு இல்லாமற் போயிற்று. அவ்வாறு அழிந்தன போக, இன்று எஞ்சி நிற்பன பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆய பதினெட்டு இலக்கியங்களும், தொல்காப்பியம் என்ற இலக்கணமும், திருக்குறள் போன்ற சில நூல்களுமே யாம். திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம்