பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 புலவர் கா. கோவிந்தன்



என்ற பத்து இலக்கியங்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெறும் நற்றிணை, குறுந்தொகை ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற இவ்வெட்டு இலக்கியப் பெரு நூல்களும் எட்டுத் தொகை எனப் பெயர் பெறும். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்ற இவ்வரிசைக்கண் வந்த நூல்கள் மட்டும் நானூற்று அறுபத்தெண்மர்க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் பாடிய இரண்டா யிரத்து நானூற்றுப் பத்துப் பாக்களைக் கொண்டுள்ளன.

மக்கள்பால் கிடந்து மாண்பு தரும் பண்பாடு களைப் பார்த்துப் பாராட்டி, அப்பண்பாடுகளைப் பிற நாட்டாரும், பிற்காலத்தில் வாழ்வாரும் அறிந்து மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற வேட்கையின் விளைவால், பாட்டிடை அமைத்து இசைப்பனவே இலக்கியங்களாம். ஆதலின், சங்க கால இலக்கிய வளர்ச்சியின் இயல்புகளை ஆராய்ந்து காண்பதன் முன்னர், அவ்விலக்கியம் தோன்றற்காம் வாழ்க்கை யினை மேற்கொண்டு வாழ்ந்த பழந்தமிழ் மக்களின் பண்பாட்டியல்பினை ஆராய்ந்து காண்பதே அமைவுடைத்து. ஆகவே, இலக்கிய வளர்ச்சியின் இயல்புகளை, அவ்விலக்கியச் செல்வங்கள் எழுவதற்குக் காரணமாய மக்களின் மாண்புகளோடு ஒருங்கு வைத்து ஆராய்தலை மேற்கொள்ளுவோமாக.

சங்க காலம், தமிழக வாழ்வில் தலை சிறந்த காலம். தமிழ் நாட்டு வாணிகம், தமிழகத்தோடு