பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 புலவர் கா. கோவிந்தன்



அறிவுரை பல வழங்கி, வழிகாட்டிகளாய் வாழ்ந்த காலம்.

கண்ணாரக் கண்ட காட்சிகளும், காதாரக் கேட்ட நிகழ்ச்சிகளும், அவற்றைக் கண்டதாலும், கேட்டதாலும் எழுந்த உணர்ச்சிகளுமே, கருத்து நிறைந்த கவிகளாக வெளிப்படும். ஆதலின், அன்று பாடிய புலவர்கள் எல்லாரும், தம் பாடற் பொருளாகத் தமிழகக் காட்சிகளையும், நிகழ்ச்சிகளையுமே மேற் கொண்டனர். அதனால், அன்று தோன்றிய தமிழ்ப் பாக்கள் தாயன்பு, தந்தை கடன், கன்னியர் கற்பு, காளையர் கடமை, அரசர் செங்கோல், அமைச்சர் நல்லுரை, ஆன்றோர் அறம், வீரர் வெற்றி என இவை பொருளாகவே தோன்றியுள்ளன.

வணிகர் வேளாளர் வழியிலும், குயவர் கொல்லர் குலத்திலும், மருத்துவமும், நெசவும் அறிந்தார் மனைகளிலும், மறவர், எயினர் மரபிலும் பிறந்த ஆடவர் பெண்டிர் ஆய இருபாலரிலுமாக்ப் புலவர் பலர் தோன்றித் தமிழ்ப் பாக்களைப் பாடியுள்ளனர். எஞ்ஞான்றும் புலவரொடு வாழ்ந்த புரவலரும் கல்வியறிவில் சிறந்தவர்களாகத் திகழ்ந்தனர். புலவர் கூறும் பொருளுரைகளைப் பொன்னேபோற் போற்றி வந்தனர். எனவே, தமிழ் மன்னர்கள் கல்வியின் பெருமையுணர்ந்து, அதனைப் போற்றினர். பொருளின் சிறப்புணர்ந்து, அதை நல்வழியில் ஈட்டி, அறவழியில் செலவழிக்க வேண்டுமென அறிந்திருந்தனர். மானத்தின் பெருமையினையும் அம்மானம் இழந்தவழி வாழாமையால் வரும் உயர்வையும் உணர்ந்திருந்தனர்.