பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3
அறிவுடை நம்பி

பாண்டிய நாடு முத்துடைத்து என்ற பெருமைக்குரிய பெருநாடு. சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமையும் அந்நாட்டிற்கே உரித்து. அந்நாடாண்ட பாண்டிய மன்னர் பலராவர். அவருள் அறிவுடை நம்பி என்பானும் ஒருவன். அறிவுடை நம்பி, கற்க வேண்டிய அறிவு நூல்களை யெல்லாம் பிழையறக் கற்ற பேரறிவுடையான். கற்றதோடு அமையாது, கற்றுவல்ல பெரியோர்களைப் பேணி, அவர் உரைக்கும் அறிவுரைகளைப் பலகாலும் கேட்டுக் கேட்டுப் பெற்ற கேள்விச் செல்வமும் உடையவன். அவன் அரசவை இருந்து, அவனுக்கு அறம் உரைத்து வந்தார் பலராவர். அவனுக்கு அவர் உரைத்த அறங்களோ மிகப் பலவாம்.

அவ்வாறு, அவன் அரசவை இருந்து அறம் உரைத்தாருள் ஒருவர் பிசிராந்தையார். பாண்டி நாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரிற் பிறந்தவர்; ஆந்தை எனும் இயற்பெயருடையவர்; பெரும் புலவர். அரசன் அவைக்கு நாள்தோறும் சென்று, அவனுக்கு அறவழி காட்டிவரும் அவர் அவனுக்கு உரைத்த