பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28 புலவர் கா. கோவிந்தன்
 


எண்ணிப் பார்த்து, ‘ஆறில் ஒன்று’ என்பதுபோல் ஒரு வரையறை வகுத்துக் கொண்டு, அவ்வொழுங்கு முறையில் பிறழாது, வரி வாங்குவாராயின், நாட்டு மக்கள், அரசர்க்குத் தாம் தர வேண்டிய வரிகளைத் தவறாது தருவர்; தந்து தாமும் வாழ்வர்; தம் அரசர்க்கும் வாழ்வளிப்பர். இவ்வாறன்றி, அரசர் தாமும் கொடுங்கோலராய்க், குடிமக்களிடம் உள்ள எல்லாப் பொருள்களையும் தமக்குப் பொருள் வேண்டும் போதெல்லாம், அக் குடிகள் அழ அழக் கொள்ளையடித்து வாழ்வதே கோமகன் செயலாம் என, வரி பல வாங்குவதை வழக்கமாகக் கொள்வராயின், அந்நாட்டுக் குடிகள், வரிச் சுமை தாங்க மாட்டாது வருந்துவர். ஆகவே, மக்கள் நிலை அறிந்து, அவர் அளிக்கத் தக்கன பெற்று வாழ்வதே பேரரசாம்; பெருமைசால் நல்லரசாம்.” அறிவுடை நம்பிக்குப் பிசிராந்தையார் அளித்த அரசியல் அறிவு இது. அறிவுடை நம்பி கேட்ட அரசியல் அறங்கள் இவைபோல் எண்ணற்றனவாம்.

அறிவுடை நம்பி அறநூல்கள் பல கற்றதோடும், அறிவுரைகள் பல கேட்டதோடும் நின்றானல்லன். ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ என ஒதியதற்கிணங்க, கற்ற நூல்களும், கேட்ட அறவுரைகளும் அறிவித்த வழியே வாழ்ந்து வழிகாட்டியாக விளங்கினான். ஆடவர்க்கு அமைய வேண்டிய அருங்குணங்கள் பலவும் அவன்பால் அமைந்து கிடந்தன. இவ்வாறு, அவன் பேரறிவும் பெருங்குணமும் பெற்று வாழ்ந்தமையால்,