பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 புலவர் கா. கோவிந்தன்



நகரத்துக் கடற்கரைக்கண் உள்ள புன்னை மரச் சோலையில் உலாவிவரும் இயல்புடையனாகிய கிள்ளி வளவன் ஒருநாள் ஆங்கு வந்திருந்த பீலிவளை என்ற நாக நாட்டரசன் மகளைக் கண்டு மணந்து கொண்டு மகிழ்ந்திருந்தான். மன்னனை மணந்த அவள், ஒரு திங்கள்வரை அவனோடிருந்து விட்டுத் தன்னாடடைந்தாள். ஆங்குப் பிறந்த தன் மகனை, அந்நாட்டிற்கு வாணிபம் கருதிவந்த சோணாட்டு வணிகன் கம்பளச் செட்டியோடு கலத்தில் ஏற்றிச் சோணாட்டிற்கு அனுப்பினாள். அனுப்புங்கால், அவன் தன் மகன் என்பதை அரசனுக்கு அறிவித்தற் பொருட்டு, அவனுக்குத் தொண்டைக் கொடி யணிந்து அனுப்பினாள். அம்மகனைப் பெற்றுக் கொண்ட வணிகன் கலமேறிச் சோணாடு திரும்பினான். ஆனால், அந்தோ இடைவழியில் அக்கலம் கவிழ்ந்து போயிற்று. கப்பலில் சென்றார் பலர் கடலுக்கு இரையாயினர். ஒரு சிலரே பிழைத்து ஊர் அடைந்தனர். அவ்வாறு பிழைத்தாருள் ஒருவன் துணையாம், அரசிளங்குமரன் அரசனை அடைந்தான். தன் மகன், திரையொலிக்கும் கடல்வழி வந்ததால், அரசன் அவனுக்குத் திரையன் எனப் பெயரிட்டுப் போற்றினான். தொண்டைக் கொடி அணிந்து வந்தமையால், அவன் வழிவந்தோர் தொண்டையர் என அழைக்கப் பெற்றனர். அவர் ஆண்ட அருவா நாடும், அன்று முதல் தொண்டை நாடு என அழைக்கப் பெற்றது. திரையனும், தொண்டையரும், தொண்டை நாடும் தோன்றிய வரலாறு இது. வேறு வகையாகக் கூறுவாரும் உளர்.