பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 புலவர் கா. கோவிந்தன்



திரையன் பேராண்மை மிக்கவன். தன்னாட்டை அடுத்துச் சிற்றரசும், பேரரசும் கொண்டு வாழ்ந்த அரசர் பலரையும் வென்று பணி கொண்டான். பகைவர், தம் பேராண்மை கண்டு அஞ்சிப், பகை மறந்து, பணிந்து திறை தர முன்வரினும், அதை ஏற்றுக் கொள்ளாது, அப் பகைவர்தம் அரண்களை அழித்து, அவர்தம் ஆற்றலை ஒடுக்கி, மணிமுடிகளைக் கைப்பற்ற எண்ணும் போர்வெறி மிக்கவர் தொண்டையோர். ஆனால், அவர் வழிவந்த திரையன், அச் செயல் பகை வளர்க்கும் அறிவில்லாத செயலாம் என உணர்ந்தான். அதனால் பணிந்து திறை தர இசைந்த அரசர்பால் சினம் ஒழிந்து, அவரைத் தன் ஆட்சிக்கு அடங்கிய அரசராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். அதனால் அவன் அரசவையில், திறை தரவந்த வேந்தர்களும், நட்புடையராய் நாடாண்ட முடிவேந்தர்களும், தம் பகைவரை வென்று வாழ்வளிக்க வல்ல படைத் துணை வேண்டி வந்த மண்டில மாக்களும் வந்து குவிந்து கிடப்பர்.

இவ்வாறு பகைத்தாரைப் பணிய வைத்தும், பிற அரசுகளை அன்பால் அணைத்துக் கொண்டும் அரசோச்சி வந்தமையால், திரையன் ஆண்ட தொண்டை நாட்டு மக்கள், பகைவரால் பாழுறல் அறியாது, அச்சம் ஒழிந்து, அகம் மகிழ்ந்து வாழ்ந்தனர். பகை அழித்து, அப் பகைவரால் உளவாம் கேடொழித்து ஆண்ட திரையன், நாட்டில் உள்ளார்க்குப் பகைவரால் கேடுண்டாதலைப் போன்றே, அந்நாடாள் அரசனாலும், அவன்கீழ்ப்