பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 39



பணிபுரிவாராலும், அணங்குகளாலும், விலங்குகளாலும், கள்வர்களாலும் கேடுண்டாதலும் கூடும்; ஆகவே, நாட்டு மக்கட்கு, அவற்றான் உளவாம் கேட்டினையும் ஒழித்து உறுதுணை புரிதல் நல்லரசின் நீங்காக் கடமையாம் என உணர்ந்தான். உணர்ந்த திரையன், காட்சிக் கெளியனாய், ஆன்றோர், அமைச்சர்களோடு அரசவையிலிருந்து, வலியரான் நலிவெய்தி முறை வேண்டி வந்தாரும், விளைவின்மை, வறுமை முதலியவற்றான் வருந்திக் குறை கூறி வந்தாரும் கூறுவ கேட்டு, முறையளித்தும், குறை போக்கியும் குடியோம்புவானாயினன். அதனால், அவன் நாடு அல்லன. அகன்று, நல்லன வாழும் வல்லரசாய் விளங்கிற்று. வழிப்போவாரை, இடை வழியில் அவர் அஞ்சுமாறு தாக்கி, அவர் கைப்பொருளைக் கவர்ந்து கொண்டு கொடுமை செய்யும் ஆறலைக் கள்வரை, அவன் நாட்டில் காண்டல் இயலாதாயிற்று. அத்துணைக் காவல் நிறைந்து விளங்கிற்று அந்நாடு. மேலும், நாட்டு மக்களை இடி இடித்தும், மின்னல் மின்னித் தாக்கியும் துயர் செய்வதில்லை. அந்நாட்டுப் புற்றுவாழ் பாம்புகள் மக்களைக் கடித்து மாளச் செய்வதில்லை; காட்டில் வாழும் கொடிய விலங்குகளாகிய புலி முதலாயின, தம் கொடுமை மறந்து கூடிக் குலவின. அத்துணை அறம் நிறைந்த நாடாய் நின்று விளங்கிற்று அவன் நாடு. அதனால், அவன் நாட்டில் புதியராய்ப் புகுந்து வாழும் பிற நாட்டார், அரண்மிக்க இடந்தேடி அலையாமல், தம் கைப் பொருள்களோடு, தாம் விரும்பும் இடங்களில்,