பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 புலவர் கா. கோவிந்தன்



தாம் விரும்பியவாறே இருந்து இளைப்பாறிச் செல்வர். அத்துணை நன்மை மிகுந்த நல்லாட்சி, திரையனின் நாட்டாட்சி!

திரையன், இவ்வாறு, ஆண்மையும் ஆற்றலும், அன்பும் அருளும், அரசியல் அறிவும் உடையவனாய் நாடாண்டனன். ஆதலின் அவன் முரசு முழங்குதானை மூவேந்தரினும் சிறந்தோனாயினன். அவன் ஆண்ட தொண்டை நாடு, அம்மூவேந்தர்க்குரிய சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் சிறந்தது எனப் புலவரும், பிறரும் போற்றிப் புகழ்வராயினர். திரையன் ஆண்ட தொண்டை நாடு, அந்நாட்டுத் தலைநகர் காஞ்சி, அந்நாட்டில் நின்று சிறக்கும் வேங்கடமலை, அந்நாட்டு நிலவளம், நீர்வளம், அந்நாடு வாழ் மக்கள் மனவளம், அவன் அரசியல் நெறிவளம் முதலாம் பல்வேறு வளங்களும் தோன்ற, கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற கடைச்சங்கப் புலவர் பெரும்பாணாற்றுப் படை எனும் பெயருடையதொரு பெரிய பாட்டைப் பாடிப் பாராட்டியுள்ளார்.

அல்லன கடிந்து, அறம் புரிந்து ஆட்சி புரியவல்ல திரையன், தன்னைப் போன்றே பிற அரசர்களும், நல்லாட்சி புரியும் நல்லோராயின், நாட்டில் பகை நீங்கும், பண்பு வளரும் என உணர்ந்தான். அதனால், நாட்டில் நல்லாட்சியை நிலவுவது எவ்வாறு என்ற அரசியல் உண்மையினை உலக அரசர் அனைவரும் அறிந்து கடைப்பிடிக்குமாறு அதை விளங்க உரைக்கும் அறப்பணியினையும் அவனே மேற்கொண்டான்.