பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலக்கியங் கண்ட காவலர் 47
 


அஞ்ச வேண்டிய பழிபாவங்களைக் கண்டு அஞ்சாமை அறிவுடைமையாகாது. ஆகவே, அறமல்லாச் செயல் கண்டு அஞ்சும் உள்ளம், அவ்வான்றோர்க்கு இன்றியமையாது வேண்டும். உலக வாழ்விற்கும், தாழ்விற்கும் தம் வாழ்வு தாழ்வுகளையே காரணமாக உடையார் பெரியர். அன்னார் ஊக்கம் குன்றி, உறக்கம் கொண்டு விடுவராயின், உலகம் அழியும். ஆகவே, அவ்வான்றோர்பால், மடியும் சோம்பலும் நில்லாது மடிதல் வேண்டும்.

உயிர், பொருள், புகழ், பழி இவற்றுள் உயிரும் பொருளும் அழியும் தன்மைய நிலையா இயல் புடையன. புகழும் பழியும் அழியா இயல்புடையன; நிலைபேறுடையன. அழிவன கொடுத்து அழியாதன பெறுதலே அறிவுடைமை. ஆகவே நிலையற்ற உயிர் கொடுத்து, நிலைபேறுடைய புகழ் பெறுதலைப் பேண வேண்டும். அதுவே அறிந்தார் செயலாம்; அவர் அறிவிற்கு அழகு தருவதாம். நிற்க. அழியாத் தன்மை யுடைமையால் பழியும் புகழும் ஒத்த இயல்பினவே என்றாலும், பழி பாராட்டத்தக்க பண்புடையதன்று: பேணத்தக்க பெருமையுடையதன்று. ஆகவே, அதைப் பெறுதல் பெரியார் செயலாகாது. அதிலும் நிலையற்ற பொருளிற்காக, உலகம் உள்ளளவும் அழியாது நிலை பெற்று நிற்கும் பழியை மேற் கொள்ளுதல், அறிவின்மை யினும் அறிவின்மையாம். அஃது ஆன்றோர் அறமாகாது. - -