பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50 புலவர் கா. கோவிந்தன்
 


நாட்டைத் தொண்டியிலிருந்து ஆண்டு வந்தனர். அவ்வாறு ஆண்ட அரசர்களுள், கணைக்கால் இரும்பொறை என்பானும் ஒருவன். அவன் கணையன் - எனவும் அழைக்கப் பெறுவன்.

கணைக்கால் இரும்பொறை பழகுதற்கினிய பண்புடையவன். நல்லோரை நண்பனாக்கிக் கொள்ளும் நல்லியல்புடையவன். தன் தலைநகராம் தொண்டியில் வாழ்ந்து வந்த பொய்கையார் என்பார், பெரும் புலமையும், பொருட் செல்வமும் வாய்க்கப் பெற்றவராதல் அறிந்து அவரைத் தன் ஆருயிர் நண்பராக மேற்கொண்டான்.

கணைக்கால் இரும்பொறை பேராண்மை மிக்கவன். வேலேந்திப் போரிட வல்ல பெரிய படையுடையவன். படைவலியோடு, சிறந்த உடல் வலியும் உடையவன். ஒருநாள், அவன் படையைச் சேர்ந்த யானை ஒன்று, மதங்கொண்டு, பாசறை எங்கும் திரிந்து, அங்குள்ளார்க்கும், அவர் உடைமைக்கும் ஊறு பல விளைக்கத் தொடங்கிற்று. அதனை அடக்கி ஒரு நிலைக்குக் கொணர்தல், அவன் வீரரால் இயலாது போயிற்று; அவரெல்லாம் அஞ்சி, ஒருபால் ஒடுங்கினர். அஃது அறிந்த கணைக்கால் இரும்பொறை, ஆங்கு விரைந்து சென்று, யானையின் மதம் அடங்கப் பற்றிப் பிணித்தான். அதன் பின்னரே, ஆங்குள்ளோர் அச்சம் ஒழிந்து உறங்கினர்.