பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 53



தாங்கிச் சென்றான். ஆண்மையில், ஆற்றலில் மிக்கோனாய அவன், அரும்போர் ஆற்றி, அக் கோட்டையைக் காத்து நின்ற படைத் தலைவர்களைப் பாழ்செய்தான்.

சேரர் படையின் சிறந்த யானைப்படை பெரும் அழிவுக்குள்ளாயிற்று. கழுமலம் எங்கும் பிணமலை களே காட்சியளித்தன. ஒரு குளத்தின் கரையின் கீழ் அக்குளத்திற்கு நீர் வருவான் வேண்டி அமைத்த நீர்த் தூம்பின் வழியே புது வெள்ளம் புகுந்து பாய்ந்து ஒடுவதே போல், வீரரால் வெட்டுண்டு வீழ்ந்த யானையொன்றின் உடலின் கீழ்க் கிடந்த, இருபுறமும் போர்த்திருந்த தோல் கிழிந்து போன முரசின் ஊடே வீரர்களின் உடலினின்றும் ஒழுகிய செந்நீர் ஒடும் காட்சி ஒருபால்.

ஆடு மாடுகளின் கால்பட்டு ஒடிந்து, கீழ் மேலாய் வீழ்ந்து கிடக்கும் காளான்கள் போல் குதிரைகளின் காலால் தாக்குண்டு, காம்பொடிந்து, தலைகீழாய்க் கவிழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைகள் ஒருபால்.

வெண்திங்களைக் கரும்பாம்பு தீண்டி நிற்பது போல் காம்பற்று வீழ்ந்து கிடக்கும் வேந்தர்களின் வெண் கொற்றக் குடையின் கீழ், வீரர்கள் வெட்டி வீழ்த்திய யானையின் கை வீழ்ந்து கிடக்கும் காட்சி ஒருபால்.

சிவந்து தோன்றும் அந்தி வானின் இடை யிடையே, கருமுகிற் கூட்டங்கள் காணப்படுவன