பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 57



பண்பு. அத்தகைய அரசர் பிறந்த குடியிலே பிறந்து, சங்கிலியால் பிணிக்கப் பெற்று இழுத்துச் செல்லப்படும் நாய்களே போல், பகைவரான் பற்றப்பட்டு, அவர் சிறையகத்தே யான் வாழ்ந்தேன். அவர் அளிக்கும் உணவினை உண்ணேன் என மறுத்து உயிர் விடுவதற்கு மாறாக, வயிற்றுப் பசி தீர, வாய் திறந்து இரந்து கேட்டு, அவர் இகழ்ந்தளித்த நீரை உண்ணும் இழிவுடையே னாய் என் போலும் இழிபிறப்பாளர் பிறவாராக!” இவ்வாறு அவன் ஏட்டில் எழுதி வைத்தான்.

சேரமான் கனைக்கால் இரும்பொறை செங்கணானால் சிறை வைக்கப் பெற்றுளான் என்ற செய்தி கேட்டார் பொய்கையார். உடனே விரைந்து சென்று, செங்கணானைக் கண்டார்; கழுமலப் போர்க்களத்தே, செங்கணான் செய்த போர்ப் பெருமையினைப் பாராட்டிக் களவழி நாற்பது என்ற நூலைப் பாடினார். பாடல் கேட்டு மகிழ்ந்த செங்கணான், புலவர் வேண்டியவாறே, சேரனைச் சிறை வீடு செய்து சிறப்பித்தான்.

     “மானம் இழந்தபின் வாழாமை முன்னினிதே!”

     “ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
      கெட்டான் எனப்படுதல் நன்று”

என்ற ஆன்றோர் மொழிக்குச் சான்றாய் நின்று, மானத்தின் மாண்புரைக்கும் அறம் உரைத்த அரசன் வாழ்க! .