பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 63



சோழர் குலப் பகைவராய பாண்டியர் குடியில் வந்தவரோ, சேரர் குடியில் வந்தவரோ அல்லர். உன்னைப் போலவே, அவர்களும் சோழர் குடியிற் பிறந்தவர்களே. அவர்களைப் பகைத்து நிற்கும் நீ, அவர்கள் குலப் பகைவராய பாண்டியனோ, சேரனோ, அல்லை; நீயும் சோழர் குலத்து வந்தவனே! ஒரு குலத்தில் பிறந்தவர்களே பகைத்துப் போரிடல் பழிக்கத் தக்கதன்றோ? மேலும் அவரோ நின் மக்கள். நீயோ அவரைப் பெற்றெடுத்தோன். நீ தேடி வைக்கும் செல்வத்தினை ஆளப் பிறந்தவர்கள் அவர்கள்; அவர்கட்கு ஆட்சிச் செல்வத்தினைத் தேடிவைக்கும் கடமையுடையாய் நீ இருந்து ஈடிலாப் புகழ் பெற்று வாழ்ந்த நீ இறந்த பின்னர் இவ்வரசினை அடைதற் குரியார் அவரேயன்றோ? இவற்றை எண்ணிப் பாராது பெற்ற மக்கள் மீதே போர் கொண்டு எழுதல் அறிவுடைமையாகுமோ? களத்தில் நீ பெற்ற இக் காளையர் இருவரும் இறக்க, நீ வெற்றி பெறுகின்றனை என்றே கொள்வோம். அவ்வாறாயின், நினக்குப் பின்னர், இந்நாட்டாட்சியினை எவர்பால் அளிப்பாய்! நினக்குப் பின், இந்நாடு, ஆள்வோரைப் பெறாமல் அழிய விடுதல் அறமாமோ? அதற்கோ இத்துணைப் பாடு? மேலும் களம் புகுந்தார் இருவரும் வெற்றி கோடல் காணக்கூடாத காட்சியாம். ஆக இரு திறத்தாரும் வெற்றி கோடல் இயலாது. நின்னோடு பகை கொண்டு வந்திருப்பார் இருவராயும் இளைஞராயும் இருக்க, நீ தனிமையும் முதுமையும்