பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 67



வேண்டினன். ஆங்கிருந்த புலவர்கள் அது கேட்டு, “வேந்தே ! ஆந்தையார், உன் புகழும், பெயரும் அறிந்தவரேயன்றி, உன்னைக் கண்டு பழகியவர் அல்லர். மேலும், நீ அவரை நண்பராகக் கொண்டதும், அவர் நின்னை நண்பராகக் கொண்டதும், எத்தனையோ ஆண்டுகட்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதுவரை ஒரு முறையேனும் உன்னைக் காண வந்தாரல்லர். மேலும் அவர் உள்ள இடமோ பாண்டிய நாட்டில், நனிமிகச் சேய்மைக்கண்ணது. இந்நிலையில் நின்னிலை அறிந்து இப்போது வருவதோ, வந்து வடக்கிருந்து உயிர் விடுவதோ இயலுவதன்று. ஆகவே, அவர்க்கென ஒர் இடம் வகுத்தல் வேண்டுவதில்லை,” என்றனர்.

புலவர் கூறுவன கேட்ட கோப்பெருஞ் சோழன், “அறிவுடைப் பெருமக்களே! பிசிராந்தையார் மிகச் சேய்மைக்கண் உள்ளார் என்பது உண்மையே. என்றாலும் அவர் வருவர். இன்று வரை ஒருமுறையும் வந்திலர் என்பதும் உண்மையே. என்றாலும் இப்போது வருவர். துன்பம் நேர்ந்த காலத்து வாராது இருந்தனர் என்ற பழிச்சொல் கேட்க அவர் செவி நாணும். யான் அரசனாய் ஆண்டிருந்த அக்காலை வாராத அவர், அரசிழந்து, உயிர் துறக்கத் துணிந்து நிற்கும் இன்று வாராதிரார்; உறுதியாக வருவர்; ஆகவே, வருவாரா, வரினும் இப்போது வருவாரா என்ற ஐயம் உங்கட்கு வேண்டாம். அவர்க்கும் ஒர் இடம் அமைத்து வையுங்கள்,” என்றான். கோப்பெருஞ்சோழன் கூறியவாறே, ஆந்தையார்க்கும் ஒர் இடம் அமைத்து