பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 புலவர் கா. கோவிந்தன்



அதைக் குறைவற நிறைவேற்றும் நாற்படையும் உடைய நலங்கிள்ளி, படைகளோடு வாழும் பாசறை வாழ்வினையே எப்போதும் விரும்புவான்; நகர வாழ்வில் அவன் நாட்டம் செல்வதில்லை. நலங்கிள்ளியின் நாட்டாசையினையும், அவன் படைப் பெருமையினையும் நன்கு அறிந்த பிற அரசர்கள், அவன் எந்நேரத்தில் தம் நாட்டின்மீது படைதொடுத்து விடுவானோ என்ற அச்சத்தால் உறக்கம் அறியாது உறுதுயர் உற்றுக் கிடப்பர்.

பெரும் படையும், பேராண்மையும், போர் வேட்கையும் உடையவனாய் நலங்கிள்ளி நாடாண் டிருந்தான். அக்காலை, உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ நாட்டின் ஒரு பகுதி, அரசிழந்து விட்டது. அஃதறிந்த நலங்கிள்ளி உறையூர் அரியணை யில் அமரும் ஆர்வம் உடையனாயினான். நலங்கிள்ளி நாடாண்டிருந்த காலத்தே, அச்சோழர் குடியிற் பிறந்த நெடுங்கிள்ளி என்பானொருவன் ஆவூர்க்கோட்டைக்கு உரியோனாய் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். உறையூர், அரசனை இழந்து அல்லல் உறுகிறது என்பதறிந்த அவனும், அதன் ஆட்சித் தலைமையினைத் தனதாக்கிக் கொள்ளத் துணிந்தான். அஃது அறிந்தான் நலங்கிள்ளி. பகைவன் படை திரட்டிப் பலம் பெறுவதற்கு முன்னர் அவனைப் பாழ் செய்வதே போர் துணுக்கமாம் என உணர்ந்தவன் நலங்கிள்ளி. பகைவரை நெருங்க விடாது, நெடுந் தொல்ைவிலேயே நிறுத்தி அழித்து விடுவதே ஆண்மைக்கு அழகாம்