பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 85



காக்கும் நல்லாட்சி, நெடுஞ்செழியன் நாட்டாட்சி. நெடுஞ்செழியன் ஆட்சி நல்லாட்சியாதலின், அவன் மக்கள் நலம் கருதும் மன்னவனாதலின், அவனைப் பழிதுாற்றும் அவன் குடிகளையோ, அவர் அவனைத் தூற்றும் பழியுரைகளையோ காணலும், கேட்டலும் இயலா. அவன் ஆற்றல் கண்டு அடங்கிப் பணியாது, பகைத்துப் போரிட வந்தார் நாடுகளுள் புகுந்து, அவரை வென்று அழிக்க, அதுகண்டு, அப்பகைவர் தூற்றிக் கூறும் பழிவுரைகளையே கேட்டல் கூடும். இவ்வாறு அறமும் ஆற்றலும் விளங்க நாடாண் டிருந்தான் நெடுஞ்செழியன்.

ஒருநாள் அரசவையுள், அவன் அரியணைமீது அரசமா தேவியோடு அமர்ந்திருந்தான். வழக்கம் போல் நிகழும் கூத்தும், பாட்டும் அன்றும் நடைபெற்றன. அன்று ஆடிய மகளிர் ஆட்டமும், அவர் பாடிய பாட்டும் என்றும் இல்லாச் சிறப்புடையவாய் அமைந்து விட்டன. அதனால், அவற்றைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்திருந்த மன்னன் தன் அறிவு மயங்கினான். அரசன் நிலையை அறிந்தாள் அரசமாதேவி. தான் அருகிருப்பவும், அரசன் ஆடல் பாடல்களில் அறிவு மயங்கினான்; ஆகவே, அவன், தன்னைக் காட்டிலும், அவற்றிடத்திலேயே பேரன்புடையான் என எண்ணினாள்; அந்நிலையே அவளுக்கு ஆறாச் சினம் பிறந்தது; அரசனை விடுத்து, அரசவை நீங்கித் தன் அரண்மனை நோக்கிச் சென்று விட்டாள். நெடுஞ்செழியன் அஃதறிந்தான். அவனோ மனைவியைப் பிரிந்தறியா மாண்புடையான். அவனால்