பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 புலவர் கா. கோவிந்தன்



காற்சிலம்பே என்பதை உண்மையாக நம்பிய நெடுஞ்செழியன், “பெண்ணே! களவிற்குக் கொலையே தண்டம் என நீதி நூல்கள் நவில்கின்றன. ஆதலின் கள்வனைக் கொல்வது கொடுங்கோலன்று. ஆகவே கவல்வது விட்டுச் செல்க,” என்றான். கண்ணகி அதனைக் கேட்டாள்: “அரசே, என் கணவனா கள்வன்? என் காற்சிலம்பை விற்ற என் கணவனா கள்வன்? அவன் விற்றது என் காற்சிலம்பன்றோ? அச் சிலம்பினுள் உள்ளது மாணிக்கப் பரலன்றோ? ஏதும் அறியாது கூறுவது என்னையோ?” என்று வெகுண்டுரைத்தாள். அதுகேட்ட அரசன், “நீ உரைத்தது நன்று. அரசியார் காற்சிலம்பில் உள்ளது முத்துப் பரலே,” என்று கூறிக்கொண்டே, அரசியார் பால் அன்றளித்த அச் சிலம்பினைக் கொணரப் பணித்தான். வந்தது சிலம்பு; வாங்கி உடைத்தாள் கண்ணகி உள்ளிருந்த மாணிக்கப் பரல் மன்னவன் வாயிற் சென்று தெறித்தது.

மணியைக் கண்ட மன்னவன் மதி மருண்டான். “பொன்செய் கொல்லன் புன்சொல் கேட்ட யானே கள்வன். அந்தோ! யானும் ஓர் அரசனோ? அறம் பிறழா ஆட்சியை அழித்து விட்டேனே! தென்னவர் தவறு செய்யார்; பாண்டியர் பிழை புரியார் என்ற புகழ்ச்சொல் என்னால் கெட்டுவிட்டதே! இனியும் என் உயிர் வாழ்வதோ! இன்னே நெடுக என் உயிர்!” என்றான். அங்ங்னமே அரசன் மயங்கி வீழ்ந்தான்; மறைந்தது அவன் உயிர் என்னே மன்னன் மாண்பு! பாண்டியர் செங்கோல் பிழைபட்டது என்ற