பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 91



அந்நாற்குலத்துள், உயர்குலத்தில் பிறந்தான் ஒருவன் கல்லாதவனாக, இழிகுலத்தில் பிறந்தான் ஒருவன் கற்று வல்லோனாயின், கற்ற அவ்விழிகுலத்தான் காலின்கீழ்க் கல்லாத மேற்குலத்தான் வீழ்ந்து பணியாற்றக் கடமைப்பட்டவனாவான். ஆகவே, ஒருவர் உயர்வுக்கும் தாழ்வுக்கும், அவர் பிறந்த உயர்குலமும், இழிகுலமும் காரணங்களாகா; அவர்தம் கல்வி கல்லாமையே காரணங்களாம். ஆகவே உலகிற் பிறந்தார். ஒவ்வொரு வரும் கற்றல் வேண்டும்.”

“கல்வி காசு கொடுத்து வாங்கும் பொருளன்று. ஒருவர், தம் ஆட்சியைக் காட்டி, ஆணையிட்டு அடிமை கொள்வதும் ஆகாது. கலை பல கற்றுப் பெற்ற அறிவுடையார், தாம் கற்ற கல்வியைப் பிறர்க்கு விரும்பிக் கொடுத்துழியே, அதைப் பெறுதல் பிறர்க்கு இயலும். ஆகவே, பிறர்பால் உள்ள பேரறிவைப் பெற விரும்பும் ஒருவன், அதை விரும்பிக் கொடுக்கும் நல்லுள்ளம் அக்கல்வி உடையார்க்கு இயல்பாகவே உண்டாமாறு ஆவன புரிதல் வேண்டும். உள்ளம் ஆணைக்கு அடங்காது; அச்சம் காட்டி அதை ஆட்கொள்வதும் இயலாது; அன்பிற்கே அஃது அடிபணியும். மனம் இயல்பாகவே மாறுதல் வேண்டும்; அம்மாற்றம், உண்டாகுமாறு அவர் உவப்பன செய்தல் வேண்டும்; அத்தகைய மனமாற்றம், கற்றுவல்ல அப்பெரியார்க்குத் துன்பம் வந்துற்ற வழி, முன்னோடிச் செய்யும் உதவியாலும் அவர்க்குப் பொருட் குறை உண்டாயது அறிந்து, போதும் என அவரே மறுக்கும் அளவு மிக்க பொருள் தருவதாலுமே உண்டாம்.