பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
94 புலவர் கா. கோவிந்தன்
 


வன்மையினை அவன் கை பெற்றதும் அப்பொழுது தான்; ஐம்படைத் தாலியை நீக்கிவிட்டு, வேம்பு அணிந்ததும், அவன் ஆட்சிக்கு வந்த அன்றுதான் நிகழ்ந்தது. அரியணை ஏறுவதற்கு முன்னாள்வரையும் அறுசுவை உணவினை உண்டு அறியான்; அந்நாள் வரை அவன் பாலுணவு உண்டே பழகி இருந்தான். அரியணை ஏறும் பசும்பூண் பாண்டியன் அத்துணை இளையனாய் விளங்கினான்.

பாண்டிய நாட்டில் பாராண்டிருப்பவனோ பச்சிளஞ் சிறுவன்; ஆனால், அவன் ஆட்சிக்குட்பட்ட பாண்டி நாடோ, கொற்கைத் துறை அளிக்கும் முத்தும், பொதியமலை அளிக்கும் ஆரம் முதலாம் பல பொருள்களும் நிறைந்து செல்வத்தால் செழித்திருந்தது. அப்பெரும் பொருள்பால் பேராசை கொண்ட பாண்டிய நாட்டுப் பகைவர்கள், பசும்பூண் பாண்டிய னின் இளமைக் காலத்தை வாய்ப்பாகக் கொண்டு பாண்டிய நாட்டின்மீது படையெடுக்கத் துணிந்தனர். அவ்வாறே யானைக்கண் சேய்மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற பெயருடைய சேரன் ஒருவனும், ஒரு சோழனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மா, பொருநன் என்பாரும் ஒன்றுகூடி, “நாற்படை உடையோம் நாம்; நல்ல திறமும் உண்டு நம்பால்; பசும்பூண் பாண்டியனோ பாலகன்; ஆகவே அவனை வெல்லுதல் எளிது; வென்றால் பெறும் பொருளோ பெரிது!” என்று எண்ணித் தம் படையொடும் வந்து மதுரைமா நகரை வளைத்துக் கொண்டனர்.