பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 95



பால் மனம் அறாச் சிறுவனே எனினும், பேராற்றலும், போர் வன்மையும் வாய்க்கப் பெற்ற பசும்பூண் பாண்டியன், பகைவர் செயல்கண்டு கலங்கினானல்லன்; வந்து எதிர்த்த பகைவரைப் பாழ்செய்தல்லது வறிது மீளேன் என வஞ்சினம் உரைத்துப் போருக்கு எழுந்தான்; வழிவழிவந்த தன் குலத்தோர் அணிந்த வேப்பந்தாரை விரும்பி அணிந்தான்; மதுரைமா நகரின் வாயிற்கணுள்ள குளத்தில் மூழ்கி எழுந்தான்; போர்ப்பறை முழங்க, மதமிக்க களிறேபோல், மாற்றார் படை நோக்கிச் சென்றான்; சென்று களம் புகுந்த செழியன் தன் களிற்றுப் படையால், பகைவர் முன்னணியைப் பாழ்செய்தான். தம் முன்னணிப் படையின் தளர்ச்சி கண்ட பகைவர் செய்வதறியாது சிந்தை கலங்கினர். அந்நிலையில் அவர் மீது வின்ரந்து பாய்ந்து பசும்பூண் பாண்டியன் பெரும் போர் செய்தான். பாண்டிப் படைமுன் நிற்கமாட்டாத பகைவர், புறமுதுகு காட்டி ஒடினர்; ஒடும் பகைவரை ஓடி உய்ய விட்டானல்லன்; அவரை அம்மட்டோடு விடின் அவர் ஆணவம் அழியாது; மீண்டும், வேண்டும் படை கொண்டு வரினும் வருவர்; ஆகவே அவர்களை அறவே அழித்தல் வேண்டும் என்று எண்ணினான். உடனே தோற்றோடும் பகைவரை விடாது துரத்திச் சென்று, அப்பகைவருள் ஒருவனாகிய சோழனுக்குரிய ஆலங்கானம் எனும் ஊர் அருகே, அப்படையை அறவே அழித்துச் சேரமான் யானைக்கண் சேய்மாந்தரஞ் சேர லிரும்பொறையைச்