பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 புலவர் கா. கோவிந்தன்



சிறைசெய்து, அவ்வேழரசர்களின் முரசுகளையும், குடைகளையும் கைப்பற்றிக் கொண்டு, தன் வெற்றிப் புகழை மக்களும் புலவரும் வியந்து புகழப் பாண்டிய நாடு மீண்டான்.

தன்னை வந்தெதிர்த்த ஏழரசர்களையும், நனி இளையனான காலத்தில், தனியே நின்று வென்ற பசும்பூண் பாண்டியன் பேராண்மை தமிழர்களின் உள்ளத்தில் தனியிடம் பெற்று விட்டது. ஆனதால் அவ்வெற்றிச் சிறப்பினை, அவன் பெயரோடு இணைத்துத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என அழைத்துச் சிறப்பித்தார்கள். அவன் காலத்தே வாழ்ந்து, தமிழ் வளர்த்திருந்த நக்கீரர், பொதும்பில் கிழார், ஆலம்பேரி சாத்தனர், மாங்குடிக் கிழார் முதலாம் புலவர் பெருமக்கள், தலையாலங் கானப் போரையும், அப்போரில் பசும்பூண் பாண்டியன் பெற்ற வெற்றிப் புகழையும், தாம் பாடிய பாக்களில் வைத்துப் பாராட்டினார்கள். ஒருவனை ஒருவன் தாக்குவதும், ஒருவனை ஒருவன் வெற்றி கொள்வதும் உலகத்தின் இயல்பு: அஃது எங்கும் நிகழக்கூடியது; அத்தகைய போர் உலகிற்குப் புதியது மன்று; ஆனால், ஏழு பேரரசர்கள் கூடி ஒருவனை எதிர்ப்பதும், அவ்வொருவன், பிறர் எவர் துணையும் வேண்டாமலே விரைந்து சென்று, அவ்வேழரசர் களையும் வென்று அழிப்பதும், அதுவும், தன்னாட்டுட் புகுந்தாரைத் துரத்திச் சென்று அவர் நாட்டில் அழிப்பதும், அம்மம்ம! அதிசயம்! அதிசயம்!