பக்கம்:இலக்கியச் சாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

105



இல்லா இல்லத்தை மங்கலநூல் இழந்த இல்லமாக அவமதிக்கும் மன்பதை உணர்ச்சி பெருக வேண்டும். வீட்டகந்தோறும் தமிழ் ஏட்டகம் இருத்தல் வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்ல விழைகின்றேன். வீடு தோறும் தமிழ்க் கலையின் விளக்கம் இலங்குமாயின், இன்று உள்ள நூல்கள் அழியா; இனி எழும் நூல்கள் வாழும். மேலும் இத்தமிழகத்து நூல்கள் எழுதலாம் என்ற நம்பிக்கையும் பிறக்கும். தமிழ்ப்பற்று

கோவை பாடிய புலவர்கள் சிறந்த தமிழ்ப் பற்றினர். முன்னூல்களைக் கற்றுத் தமிழின் பெருமையைத் துணிவாக அறிந்தவர்கள். முத்தமிழின் பெருமை, தமிழ்ப்பனுவல்களின் பெருமை, தமிழ்ப் புலவர்களின் பெருமை யெல்லாம் இக்கோவைகளில் இடைமடுத்து வருகின்றன. அகப்பொருட் செய்யுட்களில் தமிழைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்பது இலக்கணமன்று: சொல்வது நேரடியான இயல்பும் அன்று. அன்றாயிருந்தும் வேண்டுமென்றே சொல்லியிருத்தலின், கோவைச் சான்றோர்களின் தமிழன்பினைத் தெளிவாகக் காண்கின்றோம்; மறந்தும் தமிழ்ப்புறம் தொழா மொழிக் கற்பினை உணர்கின்றோம்.

வாணன்கோவைத்தலைவன், 'இவள் செங்கனி வாயுணவு தேருந்தோறும் இனிதாம் தமிழ் போன்றது எனத் தலைவி நுகர்ச்சியைத் தமிழ் நுகர்ச்சியாகப் பாராட்டுகின்றான். ‘சிறந்தார் தெரிந்த செழுந்தமிழ்' (145), யாணர்த் தமிழ்' (148), 'வரைப்பால் மதுரத்தமிழ்', (217) என்றெல்லாம் தஞ்சைவாணன் கோவையாசிரியர் அமுதுநூறி மொழிகுவர். தலைமகளின் இடை கூடல் ஒண் தீந்தமிழ் போல்வது (21) எனவும் அவள் விளையாட்டிடம் ஈர்ந்தமிழின் பொருள் போல் இனியது (166) எனவும் பாண்டிக்கோவை தமிழை உவமப்படுத்தும். ‘மந்த மாருதம் வண் தமிழ் நாறும் மலைய வெற்பா’ (277), முச்சங்க வண் தமிழ்போல் மொழியாய் (302) எனத் தலைவனையும் தலைவியையும் வண் தமிழர்களாகக் காண்பர் அம்பிகாபதி. -