பக்கம்:இலக்கியச் சாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

வ.சுப. மாணிக்கனார்



ஊர்வட்டம் கொண்டதும் திருமண நாளைக் குறிக்கின்றன என்றிவை அகநானூற்றுக் கருத்துக்கள். பிரிந்து செல்லமாட்டார் என்று நான் வாளா இருந்தேன்; பிரிவைச் சொன்னால் உடன்பட மாட்டாள் என்று அவர் வாளா இருந்தனர்; காலம் பார்த்துப் பிரிந்தனர் என்று கவல்கின்றாள் ஒரு தலைவி. தலைவன் என்னை மறைவிற் கூடியபோது யாருமில்லை; அங்கிருந்த குருகும் நீரில் ஒடும் மீனை இரைகொள்ளப் பார்த்திருந்தது என்று கலங்குகின்றாள் ஒரு தலைவி. சூல்கொண்ட பேடைக்குப் பேறு விடுதி அமைக்க ஆண்குருவி கரும்பின் பூவைக்கொண்டு வருகின்றது; என் தலைவன் பரத்தை வாய்ப்பட்டானே என்று வெதும்புகின்றாள் ஒரு தலைவி. என் மாமைக் கவின் எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் பயன்படாது பசலை நோய்க்கு ஊணாகின்றதே என்று பிரிவிடைப் புலம்புகின்றாள் ஒரு தலைவி. களவுக் காலத்து என் தோழி வேம்பைத் தந்தாலும் உமக்கு இனித்தது; இக்கற்புக் காலத்துப் பாரியது பறம்புச் சுனைநீர் தந்தாலும் உவர்க்கிறது என இடித்துரைக்கின்றாள் ஒரு தோழி. இவன் காலில் வீரக்கழல் உண்டு; இவள் அடியில் சிலம்புகள் உள. உடன்போக்கு மேற்கொண்ட இந்நல்லவர்கள் யார்? என்று அன்பு கொள்ளுகின்றனர் கண்டோர். இவையெல்லாம் குறுந்தொகைக் கருத்துக்கள். வேலன் அழைக்க வெறியாடும் மனைக்கு வந்த முருகனே நீ கடவுளாயினும் மடவை என்பது நற்றிணை. -

சாந்தும் முத்தும் இசையும் பிறந்த இடத்துக்குப் பயன்படா. ஆதலின் தலைவி ஒருவனுக்கு உரியவளே என்று செவிலியை முக்கோற் பகவர்கள் அறிவுறுத்துகின்றனர். பாலையில் வெயிலின் கொடுமையைத் தாங்காது துயர் உறும் பெடையை ஆண் புறாதன் சிறகால் நிழல்கொடுத்துக்காக்கும். இந்த அன்புக் காட்சியைக் காணும் தலைவன் நின்னை நினைந்து விரைவில் வருவான் எனத் தலைவியைத் தோழி ஆற்றுவிக்கின்றாள். அறமும் இன்பமும் வேண்டிப் பொருள்வயிற் பிரிந்தார் அன்பர் என்று தோழி எடுத்துக் கூறுகின்றாள். இவையெல்லாம் கலித்தொகைக் கருத்துக்கள்.