பக்கம்:இலக்கியச் சாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

வ.சுப. மாணிக்கனார்



இலக்கியங்கள் நேரடி வாழ்விலிருந்து தோன்றிய மூலப் பிறவிகள். அவை கற்பவர் நெஞ்சுட் புகுந்து வாழ்வை நெறிப்படுத்த வல்லவை. சங்கச் சான்றோர் அகப்பொருளைத் தொடர்புடைய துறைகளாக வைத்துப் பாடவில்லை. தமக்குட்பட்டஒவ்வொரு கூறுபற்றித்தனிப்பாடல் செய்தனர். ஆதலின் சங்க அகநூல்கள் தொகையெனப் பெயர் கொண்டன; கோவைப் பெயர் பெற்றில. அகத்திணைக்குத் தொடர்பற்றதனிப்பாடல்கள் எழுந்த தொல்காப்பிய நெறியே வாழ்வுக்குப் பொருந்தும். அந்நெறிப்பட்ட பாடல்களே உயிருடைய வாழ்வுப் பாடலாகும்.

கோவை என்பது சங்க இலக்கியம் என்னும் பெரிய மாளிகையைக் கண்டு படியெடுத்த ஒரு வரைபடமாகும்; அம்மாளிகைக்குள் செல்லப் பயன்படும் வழிகாட்டியாகும்; இலக்கியம் தோற்றிய இலக்கியமாகும். படித்துணரக் கோவைத் தமிழ் நம் திருவெங்கைவாணர்க்குக் கூறினனே' என்பர் சிவப்பிரகாசர். கோவை என்பது அகத்துறை என்னும் முத்துக்களெல்லாம் முறையாக அமைந்திலங்கும் ஒரு தனி இலக்கிய நூலாகும். அகத்திணைக் கூறுகளை நிரல்படவும் கோவைபடவும் தொடர்நிலைச் செய்யுள் கோக்கலாம் என்று நம் இடைக்காலப் பெருமக்கள் கண்டறிந்த துண்மையைப் புதுநெறியை - நாம் பாராட்டுகின்றோம். இந்நெறித் தோற்றத்தால் தொல்லைப் பனுவல்கள் அழியாது காப்புற்ற நலத்தை முன்னே குறிப்பிட்டேன். -

கோவைகள் சங்கவிலக்கியம்போல அகப்பொருளைச் சொல்லுவன எனினும், சொல்லும் நடைப்பண்பிற் சில பெருங்குறையுடையன. இக்குறைகள் இடைக்காலத்துத் தோன்றிய பல்வகை நூல்களுக்கும் பொருந்தும். 'மலரினும் மெல்லியது காமம்’ என்ற நுண்ணிய அகப்பொருளையே தமக்கு நூற்பொருளாகக் கொண்ட கோவைப் புலவர்கள் இக்குறைகளுக்கு இடங்கொடுத்திருத்தலாகாது காண். நம் அகத்தினைநுதலும் காதற்பொருள் நனிநாணுடையது:சிறிது வழுவினும் நிறை வழுவாவது. அகச் செய்யுட்களில் அவையல் கிளவி வருதலாகாது; இடக்குச் சொற்கள் புகலாகா: சங்க