பக்கம்:இலக்கியச் சாறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

வ.சுப. மாணிக்கனார்



'உன்னதத் தாமரையில் வைத்துக் கதிரோன் இதழாயிரக் கதவடைத்தான்; மேலும் வண்டு முத்திரையிட்டான். முத்திரைக் கதவையுடைத்துக்கொண்டுகாலமல்லாக்காலத்து எவ்வண்ணம் வந்தாய் திருவே என்றாங்கு அன்புத் தலைவன் இன்பச் சொல்லாடுகின்றான்.

அன்பர் வரலாறு, புராணக்கதை, சமயவுண்மைகள் என்றின்ன வகையால் கோவைகள் பொருள்வளம் பெற்றுக் கற்பனை பெருக்கிக் காதற் சுவையை வெளிப்படுத்தின. தெய்வக் காதலும் மக்கட் காதலும் இணைந்த புதிய அமைப்பினால் கோவைகள் நிலைத்த இலக்கியங்களாயின. கோவைகள் பிறந்த காலம் தமிழ்ப்பற்று மிகுந்த காலம் என்றும், உரை, சார்பிலக்கணம், சிற்றிலக்கியம் என்ற முந்நெறியால் இடைக்காலத் தமிழ் வளர்க்கப்பெற்றது என்றும், இந்நெறியில் தோன்றிய கோவை தொல்காப்பியம் சங்க இலக்கியம் முதலான தொன்னூல்களை அழியாமற் காத்தது என்றும், சமய எழுச்சி கோவை இலக்கியத்திற்கு ஊட்டம் தந்தது என்றும், சில அடிப்படைகளை விளக்கினேன்; அதற்குச் சான்றாகக் கோவை அமைப்பையும் கோவைச் சான்றோர்களின் புலமையையும் திறங்காண்போம். கோவையின் இலக்கணம்

கோவை, தலைவனும் தலைவியும் தாமே கண்டு தோழியின் துணைகொண்டு காதலின்பம் துய்க்கும் களவொழுக்க முதல், ஊரறிய மணந்து விருந்தோம்பி மகப்பெற்று வாழும் கற்பொழுக்கம் வரை ஒன்றன்பின் ஒன்றாக நிரல்பட எல்லா நிகழ்ச்சிகளையும் ஒருங்கு கூறுவது. கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் அமைந்த் கோவைகளே மிகப்பல. ஆசிரியத்தாலும் வெண்பாவாலும் பாடிய சில பழங்கோவைகளும் உண்டு. கோவைக்கு நானுறு பாடல்கள் வேண்டும் என்பது ஒரு பொதுவிலக்கணம். நானூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் கொண்ட கோவைகளே பல.ஒட்டக்கூத்தர் பாடிய நாலாயிரக்கோவை பேரெல்லைக்கு எடுத்துக்காட்டு, ஒரு துறைக்கு ஒரு செய்யுள் என்ற முறையால் அமைந்த கோவைகளும் உள. சில துறைகளுக்குப் பல பாடல்கள் உடைய கோவைகளும் உள.