பக்கம்:இலக்கியச் சாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 131

என்று விளித்தலின், தைத்திங்களையே ஒரு பாவையாகக் கண்ணதாசனார் உருவகப்படுத்துவது தெளிவு.ஏலோர் ஏலோர் என முன்னிரு பாவைகளிலும் இறுதியில் வரும் பொருளற்ற அசைச் சொற்கள் இவர்தம் தைப்பாவையில் இடம் பெறவில்லை. இச்சொற்கள் முன்னிரு பாவைகளிலுங் கூடத் தெளிவுக்கு இடையூறாக இருந்தன என்ற கருத்தினை,

'ஏல் ஓர் என்ற இரண்டு சொற்களும் திருவெம்பாவை இருபது பாட்டிலும் திருப்பாவை கடைசிப்பாடல் ஒழிந்த இருபத்தொன்பதிலும் ஈற்றடியில் வருகின்றன. ஏல் என்பதற்கு ஏற்றுக் கொள் என்றும், ஓர் என்பதற்கு ஆராய்ந்து பார் எனவும் சில பாடல் களில் பொருள்படுகின்றது. மற்றும் சில பாட்டுக் களில் அவ்வாறு பொருள் கொள்ள முடியவில்லை. அங்கு இவற்றைப் பொருள் தராது நிற்கும் அசைச் சொற்களாகவே கொள்ள வேண்டுவதாகிறது’ எனவரும் தமிழ்க் கடல் இராய சொ.வின் விளக்கத்தால் தெளியலாம். அசைச் சொற்களை விட்டது தைப் பாவையில் ஒரு புரட்சிக் கூறாகும்.

திருப்பாவை திருவெம்பாவைக்கும் தைப்பாவைக்கும் பாட மேற்கொண்ட பொருளில் முழுதும் வேற்றுமையுண்டு; முன்னிரு பாவைகளும் சமயப் பாவைகள். ஒன்று வைணவப் பாவை; மற்றொன்று சைவப் பாவை. கண்ணனையும், சிவனையும் முதற் பொருளாகக் கொண்டு அவர்தம் பெருமைக்குரிய கதைகளை அமைத்துக் கன்னியர்கள் நோன்பு தோற்று நீராடி வைகறையில் துயில் எழுப்பும் பொருட் போக்குடையவை. இவ்விரு சமயப் பாவைக்குள் சில வேற்றுமைகள் இருப்பினும் பொதுப் பொருள் நோக்கில் வாய்க்காலின் இருகரைபோல் நெருங்கியவை.அதனாலன்றோ பாவை மாநாடுகள் இணைந்து நடைபெறுகின்றன.

அன்பர் கண்ணதாசனின் தைப்பாவை ஒரு தமிழ்ப்பாவை. இவ்வுண்மையைக் கவிஞரின் வாழ்த்துப்பா வெளிப்படப் பகர்கின்றது.